பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

நா. வானமாமலை


தமிழ்நாட்டின் மாபெரும் சோஷலிஸ்டு ரியலிசவாதியான ப. ஜீவானந்தம் லெனினுடைய இவ்வாசகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். சங்க இலக்கியங்களில் தொடங்கி திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, ஆழ்வார் நாயன்மார் பக்திப் பாடல்கள், கம்பராமாயணம், சிறு பிரபந்தங்கள், பள்ளுப்பாடல் போன்ற நாட்டுப் பாடல் சார்பான இலக்கியங்கள், பாரதி, பாரதிதாசன் வரை தமிழனுடைய இலக்கியப் பரம்பரையை அவர் நன்றாக அறிந்திருந்தார். அவர் மார்க்சின் உண்மையான மாணவர்.

மார்க்சும் எங்கல்சும் தங்களுக்குள் எழுதிக் கொண்ட கடிதங்களிலும் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களிலும் பத்திரிகைகளுக்கு எழுதிய கடிதங்களிலும் எத்தனையோ இலக்கியப் படைப்பாளிகளைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கிறார்கள். வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்ட அவை தொகுக்கப்பட்டு, பண்டைக் காலம், இடைக் காலம், மறுமலர்ச்சிக் காலம், நவீன காலம் என்று பிரிக்கப்பட்டு, மார்க்சீய நூல்களை வெளியிடும் சோவியத் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

அவர்கள் காலம்வரை வெளிவந்த எந்தத் தரமான இலக்கியப் படைப்பும் அவர்கள் கண்களில் இருந்து தப்பியதில்லை. கிரேக்க ராப்சடிஸ்டுகள், (தமிழ் இலக்கியத்தில் 'பாணர்' போன்ற) நாடோடிப் பாடகர்களின் விறுவிறுப்பான காதல் பாடல்கள், கிரேக்கத்தின் சோக நாடகப் படைப்பாளிகள் முதல் இடைக்காலத்து தாந்தே, ஷில்லர், ஷேக்ஸ்பியர், தற்காலத்து பைரன், ஷெல்லி, கீட்ஸ்வரை எல்லாக் கவிஞர்களையும் அவர்கள் விமர்சனத்தோடு ரசித்திருக்கிறார்கள். ஒரு நாடகம் நன்றாக இருந்தால் அதனைப் புகழ்ந்து, அரங்கில் நடிக்க ஏற்பாடு செய்யுமாறு நாடக ஆசிரியருக்கே எங்கல்ஸ் எழுதினார்.

இந்திய இலக்கியம் மார்க்சின் காலத்தில் ஐரோப்பிய மொழிகளில் அறிமுகமாகவில்லை. மாக்ஸ் முல்லர் மொழி பெயர்த்ததன் பின்னரே சம்ஸ்கிருத நூல்களின் பொருளடக்கம் ஐரோப்பாவில் பரவிற்று. தமிழ் இலக்கியம் பற்றி மார்க்சும் எங்கல்சும் அறிந்திருக்க முடியாது. ஐரோப்பிய மொழிகள் எதிலும், சிலப்பதிகாரமோ, திருக்குறளோ, கம்பராமாயணமோ மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் நிச்சயம் மார்க்ஸ் அல்லது எங்கல்ஸ் அது பற்றி ஒரு மார்க்சீய விமர்சனம் எழுதியிருப்பர்.

ஹோமர். தாந்தே, வில்லர் போன்ற காப்பியத் கவிஞர்கள் தம் காலத்தில் வாழ்ந்த மக்களது புறவாழ்க்கையையும் அக வாழ்க்கையையும் கலைப் படிமங்களாகப் படைத்தார்கள்,