பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

நா. வானமாமலை

தாளர்களாகவும் குழப்பவாதிகளாகவும் காட்சி தருகிறார்கள்.

ஆனால் மனச்சாட்சியுடைய, சமூக உணர்வுடைய எழுத்தாளர்கள் ஆளும் வர்க்கத்தால் சுரண்டப்படுகிற, ஏமாற்றப்படுகிற உழைக்கும் வர்க்கத்தின் சார்பு எழுத்தாளர்களாகத் திகழ்கிறார்கள்.

இந்தப் போரணிகள் தெளிவாகத் தெரியாவிட்டாலும், கருத்துக் குழப்பங்கள் கலைஞர்களிடம் இருந்துவந்தபோதிலும் அரசியல் சமூக நிகழ்ச்சிகள், முதலாளித்துவச் சுரண்டல் கொள்கையைத் தெளிவாக்குகிறபோது, எழுத்தாளர்கள் தங்கள் போரணிகளை அடையாளம் கண்டுகொள்கிறார்கள், பிரசுர பலத்தாலும் பத்திரிகை வலிமையாலும் முதலாளித்துவக் கருத்துக் குழப்பத்தில் சிக்கிக்கொண்ட பல கலைஞர்கள், இன்று வளர்ச்சி பெற்றுவரும் சோஷலிச ரியலிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.

அவர்கள் தளிர்நடை போட்டுக் குறிக்கோளை அடைய முயலும்போது, சோஷலிச ரியலிசவாதிகள் என்று தமக்குப் பெயர் சூட்டிக்கொண்ட அவசரவாதிகள், அவர்களைச் சாட்டையால் அடித்துக் கீழே தள்ளிவிட்டு, மீண்டும் முதலாளித்துவச் சார்பு எழுத்தாளர்களாக்கிவிடும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். முற்போக்கு அணிக்கு இவர்கள் பெரும் சேதம் விளைவிக்கிறார்கள்.

சோஷலிஸ்டு ரியலிச மரபு

மூன்றாவது கருத்தமைப்பு சோஷலிஸ்டு ரியலிச மரபாகும். சோவியத் இலக்கியத்தின் சோஷலிஸ்டு ரியலிச மரபும் முதலாளித்துவ நாடுகளில் வளருகின்ற சோஷலிஸ்டு ரியலிச மரபும் மாறுபடுகின்றன. ஆனால், இவை இரண்டும் இணைந்தே வளருகின்றன.

சோவியத் இலக்கிய வளர்ச்சிக்கு முன், ரியலிச இலக்கியம் (டால்ஸ்டாய், டாஸ்டாவெஸ்கி, புஷ்கின் போன்றவர்களால்) உலகிலேயே மிகப்பெரும் வளர்ச்சி பெற்றிருந்ததாக இருந்தது. ரஷ்ய எழுத்தாளர்கள் நாவல், சிறுகதை ஆகிய துறைகளில் உலகப் புகழ் பெற்றிருந்தார்கள். இவ்விலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் சோஷலிஸ்டு ரியலிச இலக்கியம் தோன்றியது. இப்புதிய இலக்கியமரபின் தந்தையாக மார்க்சிம் கார்க்கி விளங்கினார். அவர் புரட்சிக்குப் பின்னர் இலக்கியம் படைப்பதை நிறுத்திவிட்டு எழுத்தாளர் சங்கம் மூலம் புதிய சோஷலிசப் படைப்பாளர்களைப் பயிற்றுவிப்பதில் ஈடுபட்டார்,