பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. பி. சிற்றரசு

11


பட்டதோ அந்த உண்மையின் பிரதிநிதிகளைக் காண, மக்களை நல்வழிப்படுத்தும் மதத்தலைவர்களை மனமாரப் போற்ற.

ஏமாற்றம்

னால் அங்கு அவன் மதத்தின் உண்மையுருவைக் காணவில்லை. மதத்தின் பெயரால் உருமாறித்திரியும் மதோன்மத்தர்களைக் கண்டான். எல்லார்க்கும் பொதுவாக ஏசுவால் அளிக்கப்பட்ட கொள்கைகளைக் கள்ளச் சந்தையில் விற்கும் கயவர்களைக் கண்டான். "உன்னை நீ நேசிக்கிற மாதிரி பிறரையும் நேசி," என்ற இயேசுவின் பொன்மொழிக்குப் புறம்பாய், அவர்களை அவர்களே போஷிக்க பிறரை ஏசித்திரிந்த பொல்லாதவர்களைக் கண்டான். சிலுவையில் அறைந்து இரும்பு முள்ளால் செய்த தொப்பியைத் தலையில் போட்டு சம்மட்டியால் அடிக்கப்போகும் நேரம். இயேசுவே! "இதோ உம்மைக் காட்டிக் கொடுத்த ஜூடாஸ்" என்று, அவனைக் கொண்டுவந்து தன் முன் நிறுத்தியபோது, ஆண்டவா! எனக்காக அவனை மன்னித்துவிடு," என்ற அப்பெருந்தகையின் பேரால் மக்களைக் கசக்கிப் பிழிவதே கடமை எனத்திரிந்த கயவர்களைக் கண்டான். எந்த மரச்சிலுவையில் இயேசுவை அறையப் போகின்றார்களோ, அந்த மரச் சிலுவையை அதே இயேசுவின் தோளில் வைத்து சுமக்கச் செய்த கோரக் காட்சியைக் கண்டும், கேட்டும், படித்தும், அதே சிலுவையை பொன்னாலும் வெள்ளியாலும் அணிந்து திரியும் பொல்லாதவர்களைக் கண்டான்.