பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி. பி. சிற்றரசு

41


குத்திச் சாய்த்த ஏந்தலே வருக ! வருக! என வாயார வாழ்த்தி வரவேற்றனர் வாயிலில் கூடியிருந்த மக்கள்.

உத்திரவு

இதற்குள் எதிரிகளின் படையெடுப்பு என்ற சங்கநாதத்தைக் கேட்டான் சார்லெஸ். போர் முகங் காணவேண்டும்! அதற்கு போப்பின் ஆசீர்வாதமும், உத்திரவும் தயவும் வேண்டும். மார்ட்டின் லூதரை மனமார மன்னித்துத் தான் முன்பு தந்திருந்த வாக்குத்தத்தத்தின்படி உயிரோடு வெளியே அனுப்பிய மன்னன், அடுத்த வினாடியே அவன் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் அகப்பட்டுக் கொண்டான். ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டானே இந்த உலுத்தனை என்று கோபங்கொண்ட போப்பின் மனச் சாந்திக்காக, "மார்டின் லூதரின் உடலைக் கொண்டு வரவேண்டும், மண்டையை மயானத்தில் சேர்க்க வேண்டும், அவன் எழுதிய நூல்களைத் தீயிலிட வேண்டும், அவன் இருக்க இடமோ, உடுக்க உடையோ, உண்ண உணவோ யாரும் அளிக்கக் கூடாது. அப்படிச் செய்பவர்கள் அரசாங்கப் பகைவர்கள். சட்ட விரோதிகள். நாட்டுத் துரோகிகள். மத விரோதிகள். சமூக விரோதிகள். ஆகவே உடனே பிடித்துக் கொடுங்கள் லூதரை" என்ற கட்டளையைப் பிறப்பித்துவிட்டான். போப் புன்னகை புரிந்தான். அறிக்கைகள் மக்கள் நடமாடும் இடங்களிலெல்லாம் ஒட்டப்பட்டது.