பக்கம்:மிஸஸ். இராதா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடத்தை நடத்தமுடியவில்லை. மறுவருடமே பாண்டிச்சேரி மேற்றாணியார் அருள் மலர் கான்வெண்ட்டுக்கு ஒரு மதரையும் நியமித்து இரண்டு ஆசிரியைகளையும் அமர்த்திக்கொள்ள ஆணை பிறப்பித்துவிட்டார்கள்.

அருள் மலர் கான்வெண்ட்டின் மகிமை புதுப்பட்டணம் மட்டுமின்றி, தாய்ப் பட்டணமான மதுரை மாநகரிலும் பரவிடத் தொடங்கியது. நகரிலுள்ள பெருந்தனக்காரர்கள் அவர்கள் குழந்தைகளைக் கார்களிலும் ரிக்‌ஷாக்களிலும் புதுப்பட்டணம் கான்வெண்ட்டுக்கு அனுப்பத் தொடங்கினர்.

கான்வெண்ட்டுக்கு இப்போது புதிய கட்டிடம் வந்துவிட்டது. மதரும் சிஸ்டர்களும் தங்குவதற்குத் தனியாக குவார்ட்டர்சும் கட்டியாகி விட்டது. குழந்தைகளை வீடு தேடிப்போய்க் கூட்டிக்கொண்டு போய் விடுவதற்கும் கூட்டிவருவதற்கும் புதிய டீசல் வேன் ஒன்றும் வாங்கிவிட்டார்கள். புண்ணிய காரியத்திற்காகத் தொடங்கப்பட்ட அந்த கான்வெண்ட் ஒரு பெரிய வாணிப ஸ்தாபனம் போல் தானாக வளர்ந்துவிட்டது. சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடாமல் இருந்துவிட்டால், சாப்பிடக் கூடாததைச் சாப்பிட்டது போல் உடல் நலம் கெட்டுவிடும் என்று உணர்த்தும் டாக்டரைப்போல் மதரும், சிஸ்டர்களும் மிகுந்த கவனத்துடன் போதனை செய்து வந்தார்கள். அருள்மலர் கான்வெண்ட்டின் வெற்றிக்கு அது அமைந்த இடம் மட்டும் காரணம் அல்ல; செல்வந்தர்களின் அரவணைப்பு மட்டும் காரணமல்ல; அதன் நிர்வாகத் திறமையும் ஒரு முக்கிய காரணம்.

கான்வெண்ட்டுக்கு இப்போது ஒரு மிஸ் வந்திருக்கிறாள். அவள், ஒரு ஒய்வு பெற்ற ஆசிரியரின் மகள். அவளுடைய குளிர்ச்சியான தோற்றமும், அவள் குடும்பத்தின் ஏழ்மை நிலையும்தான் அவளை கான்வெண்ட்டில் ஒரு மிஸ் ஆவதற்கு வழி வகுத்துக்கொடுத்தன.

மிஸ் மஞ்சுளா !

இதுதான் அவள் பெயர். ஆங்கிலம் சரளமாகப் பேசுவாள். அவளும் ஒரு கான்வெண்ட்டில் படித்தவள் தானே !

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/24&oldid=1545133" இலிருந்து மீள்விக்கப்பட்டது