பக்கம்:மிஸஸ். இராதா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விட்டு விட்டுத் திரும்பியது. பாமினி பள்ளிக்குள் ஒடி வந்தாள். மஞ்சுளா ஒடிப்போய் அவளை வாரி அணைத்து முத்தமிட்டு விட்டு அவளுடைய புத்தகப் பையைப் பறித்து வழக்கம் போல் ஆவலோடு பார்க்கும் சிலேட்டைப் பார்த்தாள். அதில்,

“மஞ்சு, என் தகப்பனாரை திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்து விட்டேன். விரைவில் திருமணம் நடைபெறும். பயப்படாதே — ஆனந்தன்”

— என்று எழுதப்பட்டிருந்தது.

அதைப் படித்ததும் மஞ்சுளாவின் மனம் பூரித்து வீங்கியது அப்படி ஒரு செய்தி ஆனந்தனிடமிருந்து வரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு விரைவில் ஆனந்தனின் தந்தை திருமணத்திற்கு இசைவளித்தது தனது பாக்கியமே என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

மஞ்சுளா, சாதாரண ஒரு ஒய்வு பெற்ற ஆசிரியரின் மகள்; ஆனந்தனோ ஒரு பெரிய நிறுவனத்திற்கு அதிபரின் ஒரே மகன்.

மஞ்சுளா, ஆனந்தன் இருவரின் திருமணம், ஆனந்தன் வட்டாரத்தில் ஒரு மனப்புழுக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்தது. யார் சும்மா இருந்தாலும், வீட்டில் பெண்ணை வைத்துக்கொண்டு பெரிய இடத்து மாப்பிள்ளைகளைத் தேடிக் கொண்டிருப்போர் சும்மா இருப்பார்களா?

"இதில் ஏதோ விஷயம் இருக்கிறது. இல்லாவிட்டால் இப்படி ஒரு பொருந்தாத சம்பந்தம் நடைபெறவே நடைபெறாது. ஆனந்தன் ஏதோ ஒரு வகையில் பெண் வீட்டாரிடம் சிக்கிக் கொண்டிருக்க வேண்டும் அல்லது அவனது தந்தை சிக்கிக்கொண்டிருக்க வேண்டும்; இல்லாவிட்டால் குடியிருக்கக்கூட ஒரு சரியான வீடில்லாத பெண்ணை மணக்க ஆனந்தன் எப்படிச் சம்மதிப்பான்?" — இந்தப் பிதற்றல் பிரச்சாரங்கள் பெண் வீட்டை இடித்துத் தள்ளுமளவிற்கு முற்றுகையிட்டன.

பெண்ணுக்குத் தந்தையோ ஒய்வு பெற்ற ஆசிரியர்; வாழ வேண்டிய பருவத்தை வாழ்ந்து கழித்தவர்; அவர் எதற்கும்

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/33&oldid=1549827" இலிருந்து மீள்விக்கப்பட்டது