பக்கம்:மிஸஸ். இராதா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசையவில்லை. "மனிதர்கள் விரும்பினால் சமாதியைக் கோயில் என்று வணங்குவார்கள். விரும்பாவிட்டால் ராஜகோபுரம் இருந்தால் கூட அதைச் சமாதி என்று அலட்சியம் செய்து ஒதுங்கிப் போவார்கள். வெறுந்துணியை ஆடையாக்க வேண்டும் என்றால் அதை வெட்டி, சேர்த்துத்தானே தைக்கவேண்டும். அது புதுத்துணி, அதை வெட்டக் கூடாது என்றால் ஆடை எப்படிக் கிடைக்கும் அது மாதிரித்தான் ஒரு ஏழைப் பெண் பணக்கார வீட்டுக்குப் போவதும்" என்ற அலட்சியத்தோடு திருமண நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

மஞ்சுளாவின் ராஜினமாவிற்கு பிறகு திருமண ஏற்பாடுகள் துரிதமாக நடந்தன. ஆனந்தன் வீடு, ஒரு புதிய கோயிலின் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாட்டைவிட சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வந்தது. மேளக்கச்சேரி, பாட்டுக்கச்சேரி, பரதநாட்டியம் என்று இப்படிப் பிரமிக்கத்தக்க வகையில் நிகழ்ச்சி நிரல் தயாராகி இருந்தது. திருமணம் நல்ல நாளில் சாஸ்திரம் படித்த பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட சுபவேளையில் தான் முகூர்த்தம் வைக்கப்பட்டிருந்தது. .

மஞ்சுளா — தன் வாழ்க்கையில் இப்படி ஒரு மாறுதல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. "ஒரே செடியில் பூத்த இருமலர்களில் ஒன்று பூக்கடைக்கும், மற்றொன்று கோவிலுக்கும் பிரிந்து விடுவதைப்போல நான் ஆண்டவன் சந்நிதானத்திற்குப் போகிறேன்” என்று அவள் மனதுக்குள்ளேயே களிப்படைந்து கொண்டிருந்தாள். அவள் கிறிஸ்துவப் பள்ளியில் பணியாற்றியதால் அவளுக்கு அடிக்கடி இப்படி பைபிளின் சாரம் நினைவுக்கு வந்து விடுவதுண்டு.

திருமணம் முடிந்துவிட்டது. பொருளாளர்கள், அருளாளர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் மணமக்களை ஆசீர்வதித்தார்கள். மஞ்சுளாவின் அழகைப் பார்த்த ஆனந்தனின் நண்பர்கள்— 'ஆனந்தா நீ கொடுத்துவைத்தவன்; உன்னிடம் பணம் இருக்கிறது; உன் மனைவியிடம் அழகு இருக்கிறது. இரண்டும் சேர்ந்தால் வாழ்க்கை தானாக அமைந்து விடுகிறது என்று புதிய நீதிகளைப் படிக்கத் தொடங்கினர்கள். மஞ்சுளாவிற்கு தோழிகள்

28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/34&oldid=1549830" இலிருந்து மீள்விக்கப்பட்டது