பக்கம்:மிஸஸ். இராதா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"உங்ககிட்டே விரிவாச் சொல்ற மாதிரி இல்லே! அது குஷ்டம்தான்! முதல்லே தம்பியை டாக்டர்கிட்டே கூட்டிப் போயி ஒரு ஊசியைப் போட்டுட்டு வாங்க!”

"இந்தா பாரு! பதட்டத்திலே எதையும் உளராதே கல்யாணத்துக்கு வந்தவங்களெல்லாம் வெராந்தாவிலேயும், பந்தலிலேயும் தூங்கிக்கிட்டு இருக்காங்க! விடிஞ்சப்புறம் பாத்துக்கலாம்!”

"முடியாது! என் புள்ளையை முதலிலே நான் காப்பாத்தனும், குஷ்டம் தொத்து நோயி!”

“யாரு சொன்னா குஷ்டம் தொத்து நோயின்னு?”

“யாரு சொல்லனும், எனக்குத் தெரியாதா? முதல்லே நான் சொல்றதைக் கேளுங்க!” ஆனந்தனின் தாயார் போட்ட ஆர்ப்பாட்டம் கல்யாண வீட்டை அலைமோத வைத்து விட்டது. விழித்துக் கொண்டவர்களுக்கு எதுவும் புரியவில்லை. தூங்குகிறவர்களுக்கு இந்தத் தடபுடல்களெல்லாம் கனவுபோல் தோன்றியிருக்க வேண்டும்! ஏனெனில் அவர்கள் எல்லோரும் புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்கள்.

பெண்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கண்களைக் கசக்கினார்கள். பெண் வீட்டுக்காரர்களுக்காக அனுதாபப்பட ஆளில்லை. மாப்பிள்ளை வீட்டுக்காரர்களின் ஆர்ப்பாட்டத்தை மட்டுப்படுத்தக்கூட வழியில்லை தூக்கத்திலிருந்து விழித்திருந்த மஞ்சுளாவின் தந்தை கூனிப் போய்விட்டார். நீந்தத் தெரியாதவன் கிணற்றில் விழுந்து விட்டதைப் போல் அவர் உள்ளம் திக்குமுக்காடியது.

விடிவதற்குள் கல்யாண வீடு முழுதும் பரவி வெளியாட்களுக்கும் செய்தி எட்டிவிட்டது.

“ஆனந்தா, என்ன உன் முடிவு?” பல கோணங்களிலிருந்து பலர் இந்தக் கேள்வியை எழுப்பினார்கள்.

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/38&oldid=1549836" இலிருந்து மீள்விக்கப்பட்டது