பக்கம்:மிஸஸ். இராதா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவனை உறுத்தி அழுத்தியது. அவன் முடிவு எதுவும் கூறவில்லை. அவனைச் சுற்றியிருந்த அவனது உறவினர் கூட்டம் அவனே நச்சரித்தது.

“ஆனந்தா, இது லேசான விஷயமல்ல; வாழ்க்கைப் பிரச்சனை. வாழ்க்கை என்பது ஆடியில் விதைத்து மார்கழியில் அறுவடை செய்யும் விவசாயம் போன்றதல்ல. அது ஆயிரம் காலத்துப் பயிர்! பெரிய குடும்பத்திற்கு அவமானத்தைத் தேடி வைத்து விடாதே” உறவினர்களின் ஒவ்வொரு சொல்லும் அவன் நெஞ்சைத் துளைத்து அவனைக் கோழையாக்கிக் கொண்டிருந்தது.

“என்னடா இப்படிக் குதிரு மாதிரி உட்கார்ந்திருக்கே! சொந்தக்காரங்க சொல்றதைக் கேளு! நீ ஒரு குஷ்டரோகிப் பெண்ணோடவா வாழப்போறே?”

“அம்மா!”

"இந்தக் கல்யாணத்தை இப்பவே தீர்க்கணும்! இந்தப் பந்தல் பிரிக்கும் முன்னாடியே வேறொரு பெண்ணை நான் மருமகளாகப் பார்க்கணும், என்னடா சொல்றே?”

“அம்மா!”

“இது என் முடிவும் உங்கப்பா முடிவும்! சொந்தக்காரங்க முன்னலேயே இப்பவே தீத்துக்குவோம்.”

அதற்குப்பிறகு கூடியிருந்தவர்கள் ஆனந்தனின் பதிலுக்குக் காத்திருக்கவில்லை.

பாவம் மஞ்சுளா! அவளுடைய சுமங்கலி வாழ்க்கை அரும்பிலேயே கருகிவிட்டது. அவள் அவளுடைய பிறந்த வீட்டுக்கே திரும்பி விட்டாள்.

அன்று படுக்கையில் படுத்த அவள் தந்தை மீண்டும் எழுந்திருக்கவே இல்லை.

மஞ்சுளா, தந்தையை இழந்து விட்டாள். மனக்கவலை, முதுமையை விடக் கொடிய வியாதி. அந்த வியாதி முதுமை யுடையவர்களுக்கே வந்து விட்டால் அவர்கள் தப்பவே முடியாது; புலியிடம் சிக்கிய வெள்ளாடு மாதிரிதான்.

34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/40&oldid=1549838" இலிருந்து மீள்விக்கப்பட்டது