பக்கம்:மிஸஸ். இராதா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொண்டே கேட்டேன். இப்படிப்பட்ட கேலிக்கூத்துகளெல்லாம் முதலிரவு அன்று நடக்கும் போலிருக்கிறது என்று நான் முதலில் நினைத்து விட்டேன்.

"அவர் பதில் பேசவில்லை. உடைகளை மாட்டிக்கொண்டு கட கடவென்று கீழே இறங்கி விட்டார். நான் அலங்கோலமாக நிற்கிறேன். சற்று நேரங்கழித்து யாரோ மாடிப்படியில் ஏறிவரும் அரவம் கேட்டது. நான் வேகவேகமாக உடைகளை அணிந்தேன். வேறு யாருமல்ல; என் மாமியார் தான் வந்தார்."

"நில்லு அப்படியே!”

"ஒன்றும் நடக்கவில்லையே அத்தே!"

"அது வரையில் நாங்கள் செய்த புண்ணியம்! உனக்குக் குஷ்டம் என்கிறானே என் மகன்!” என்றார் அவர் அம்மா.

"எனக்கா குஷ்டம்?’’

"வேறு யாருக்கு! உனக்குத் தான்!” என்று கூறிக்கொண்டே என் புடவையை உரிந்தார் என் அத்தை. என் தொடையில் ஒரு வெள்ளைத் தழும்பு இருந்தது. அதைப் பார்த்ததும் என் அத்தை எனக்குக் குஷ்டம்தான் என்று ஊர்ஜிதம் செய்துவிட்டார். அவ்வளவுதான் என் கழுத்தில் ஏறிய தாலி இறங்கியது, என் கூந்தலில் இருந்த பூக்கள் பிய்த்தெறியப்பட்டன. சிறு அழுக்குகூடப்படாமல் என் மஞ்சள் கயிறு அவிழ்க்கப்பட்டு விட்டது. அதற்குப் பிறகு தான் இந்த எஸ்டேட்டுக்கு வந்தேன். புண்ணியவான் சடையப்பரிடம் எல்லா விவரத்தையும் சொல்லி அழுதேன். அவர் என்ன பெங்களூருக்கு அழைத்துப் போய் சிகிச்சை செய்தார். இப்போது அந்த வெள்ளைத் தழும்பு இல்லை; மறைந்து விட்டது. உங்கப்பா எனக்குக் கடவுள் மாதிரி. எந்தப் பெண்ணாவது கடவுளைப் புருஷனாக ஏற்றுக்கொள்வார்களா கீதா?”

ராதாவின் இந்தச் சோகக் கதை கீதாவைக் கண்கலங்க வைத்தது.

57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/63&oldid=1545442" இலிருந்து மீள்விக்கப்பட்டது