பக்கம்:மிஸஸ். இராதா.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விலகிக்கொண்டு சித்தாப்பூரில் பெட்டிக்கடை, டீக்கடை, துணிக்கடை, தையல்கடை வைக்கத் தொடங்கி விடுகிறார்கள். இப்படி வளர்ந்த ஊர்தான் சித்தாப்பூர்.

தலைக்காவேரியில் உள்ள நாட்டுக்கோட்டையார் விடுதி, மலையில் கட்டப்பட்ட வீடுபோல் இல்லாமல், சமதரையில் கட்டப்பட்ட ஒரு மாளிகை போலவே இருக்கும். ஒன்பது வகையான கோவில்களைக் குலதெய்வங்களாக வணங்கும் அவர்கள் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து அந்த விடுதியைக் கட்டி, அங்கு வருவோரை உபசரிக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

திருமணத்திற்குப்பிறகு, முதல் முறையாக மனைவியை குடகிற்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கும் ஆனந்தனையும்: கீதாவையும் தலைக்காவேரிக்குப் போய் நீராடிவிட்டு வரச் சொல்லவேண்டும் என்று சடையப்பர் ஆசைப்பட்டார். குடும்பக்கவலைகளை மறப்பதற்கும், குழந்தை இல்லாதவர்கள் குழந்தைப் பேற்றினைப் பெறுவதற்கும் தலைக்காவேரியில் நீராடினால் பலன் கிடைக்கும் என்று அவருக்கு ஒரு நம்பிக்கை.

"கீதா!"

"என்னப்பா!"

"நாளைக்கு ஆடி வெள்ளி! நீயும் மாப்பிள்ளையும் தலைக்காவேரிக்குப் போயி, நீராடிட்டு வந்தா நல்லது. காவேரித் தாயே, அடுத்த வருஷம் இதே ஆடி வெள்ளிக்கி நாங்கள் ஒரு குழந்தையோடு வரணும்னு வேண்டிக்கிட்டு வாம்மா!'

"சரியப்பா ஆனால் ஒரு வேண்டுகோள்!”

"சும்மா சொல்லம்மா!'

"எங்களோட ராதாவையும் அனுப்பி வையுங்கப்பா!"

"ராதாவா?... அவளுக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை இல்லை! அவள் சுவாமி தரிசனம் செய்து நான் பார்த்ததே இல்லை! அவளுக்காகவும் நீயே வேண்டிக்கிட்டா நல்லது!”

60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/66&oldid=1545491" இலிருந்து மீள்விக்கப்பட்டது