பக்கம்:மிஸஸ். இராதா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்று பேசிக்கொண்டே நாலாபக்கமும் சுற்றிப் பார்த்துக் கொண்டார் சடையப்பர்.

"என்னப்பா, இப்படிப் பாக்கிறீங்க?"

"உன்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்லணும்னு நெனச்சேன்... ராதாவுக்கு எப்படியாவது திருமணம் செஞ்சுவச்சுடணும்னு இருக்கேன். திடீர்னு சொன்னா அவ ஒத்துக்கிட மாட்டாள். கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லணும் நீயும் சேர்ந்து தான் சொல்லணும். செளகரியப் பட்டால் மாப்பிள்ளைக்கூடச் சொல்லலாம்."

—அப்போது திடீரென்று உள்ளே நுழைந்த ஆனந்தன் "மாப்பிள்ளை யாரு மாமா?" என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தான்.

"மாப்பிள்ளைக்கா பஞ்சம்? இந்த எஸ்டேட்டிலே ஒரு பகுதியை தர்றேன்னு சொன்னா, எத்தனை பேரோ வருவாங்க! அதுவும் இல்லேன்னா, நானே எனக்கு ஒரு சுவீகாரப்புத்திரனை எடுத்துக்கிட்டாப் போகுது? இவ்வளவு பெரிய குடும்பத்திற்கும், சொத்திற்கும் நான் அதிபதியாவேன்னு எனக்கே தெரியாது. நான் மட்டும் இங்கே சுவீகாரமா வரல்லேன்னா இவ்வளவு காலத்திற்கும் ஏதாவது ஒரு வட்டிக் கடையிலேதான் குமாஸ்தாவா இருந்திருப்பேன்" -- சடையப்பர் பேச்சில் நன்றி உணர்ச்சியும், பெருந்தன்மையும் போட்டி போட்டு மிதந்துகொண்டிருந்தன.

"கீதா, மாமா பேச்சைக் கேட்டியா?"

'அப்பா, எதையும் யோசிக்காமல் செய்யமாட்டாங்க! எனக்கு ஒரு அண்ணன் வருவது உங்களுக்கும் ஒரு பக்கபலம் தானே!’

கீதாவின் எதிர்பாராத இந்தப் பதில் ஆனந்தனுக்கு கஷாயம் குடிப்பது போல் இருந்தது.

61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/67&oldid=1551108" இலிருந்து மீள்விக்கப்பட்டது