பக்கம்:மிஸஸ். இராதா.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



"பின் எதற்காக இங்கே வந்தீர்கள்? குஷ்டம் போய் விட்டதா என்று பார்ப்பதற்காக வந்தீர்களா?"

"உனக்கு ஒரு அபாய அறிவிப்பைச் சொல்லி விட்டுப்போக வந்தேன். நீ இன்னும் இரண்டு நாட்களுக்குள் இந்த எஸ்டேட்டை விட்டுப் போய்விட வேண்டும்! உனக்கும் எனக்கும் இருந்த உறவை மற்றவர்கள் தெரிந்துகொள்ளுமுன் நீ மரியாதையாகப் போய் விடுவது நல்லது.”

"மிஸ்டர் ஆனந்த்! என்னை நீங்கள் இப்போது மிரட்டிக் காரியம் பார்த்துவிட முடியாது. நான் இந்த சில்வர் ஸ்டார் எஸ்டேட்டின் செக்ரெட்ரி! அதை மறந்து விடாதீர்கள்! சாதாரண தினசரிக் கூலி அல்ல! யாரைக் கேட்டு நீங்கள் இந்த அறைக்குள் நுழைந்தீர்கள்! ஒரு பெண் தனிமையில் இருக்கும் போது அதுவும் நள்ளிரவில் மனைவியைப் படுக்கையில் தூங்க வைத்து விட்டு இப்படி வருவது உங்களுக்கு வெட்கமாகத் தெரியவில்லையா?"

“ராதா! உன் திட்டத்தை நான் அறியாதவனல்ல! எடுபிடியாக நுழைந்து இந்த எஸ்டேட்டுக்கே எசமானியாகப் பார்க்கிறாயா? அது ஒன்றும் என்னிடம் நடக்காது!"

"ஒரு நல்ல பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பின்னும்கூட உங்களுடைய கெட்டபுத்தி இன்னும் போகவில்லையே என்றுதான் வருந்தத் தோன்றுகிறது!"

"ராதா இறுதியாகச் சொல்லுகிறேன்; இந்த இரவு தான் நீ இந்த எஸ்டேட்டில் கழிக்கும் கடைசி இரவாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாளை இரவு இந்த எஸ்டேட்டில் எங்காவது ஒரு புதரில் நீ பிணமாகக் கிடப்பாய்!”

"மிஸ்டர் ஆனந்த், நீங்கள் நாளைக்கு என்னைக் கொல்லப் போவது இரண்டாவது முறை. முதல் முறை என் வாழ்க்கையைக் கொன்றிர்கள்; நாளைக்கு என் உயிரைக் குடிக்கப் போகிறீர்கள்; இல்லையா!"

65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/71&oldid=1551110" இலிருந்து மீள்விக்கப்பட்டது