பக்கம்:மிஸஸ். இராதா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



"ஏன் களைப்படைந்திருக்கிறாய்? உன் முகத்தில் எப்போதுமிருக்கும் களையைக் காணவில்லையே?"

"ஜலதோஷம் சார்!"

"ஜலதோஷம் என்றால் இவ்வளவு நேரத்திற்குள் கீதாவுக்கும் அது ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமே?”

சடையப்பர் வினயமில்லாமல் தான் கேட்டார். ஆனால் ராதா?

"ஒட்டிக் கொண்டிருக்கிறதே! அதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?” என்று உள் அர்த்தத்தோடு பதில் சொன்னாள் ராதா.

"ஜலதோஷம் இல்லையப்பா! அது குணதோஷம்!” என்று வெடித்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள் கீதா!

கீதா உள்ளே வந்ததும் ராதா, "சார் நான் பீல்டுக்குப் போகிறேன்" என்று சொல்லிவிட்டு வெளியேறி விட்டாள்.

"கீதா, என்னம்மா நடந்தது?”

"நீங்கள் எதையும் காதில் போட்டுக்கொள்வதில்லை; ஆனல் எங்களால் அப்படி இருக்க முடியவில்லை. ராதாவை வேலையை விட்டு நீக்காதவரை உங்களுக்கு ஏற்பட்டுள்ள களங்கம் தீராது!"

"வழக்கைச் சொல்லாமல் நீயே தீர்ப்பையும் வழங்கி விடலாமா கீதா? என்ன நடந்தது! அவள் உன்னை அவமதித்தாளா, அல்லது உன் புருஷனை ஏதாவது பேசிவிட்டாளா? என்னிடம் சொல்வதற்கே கூச்சப்பட்டால், நான் எப்படி முடிவு சொல்வது?"

"எஸ்டேட் முழுவதும் ஒரே பேச்சு; உங்களுக்கும், ராதாவுக்கும் தொடர்பு இருக்கிறதாம்!”

சடயப்பர் பலமாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் துளியும் மாசு இல்லை.

71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/77&oldid=1551115" இலிருந்து மீள்விக்கப்பட்டது