பக்கம்:மிஸஸ். இராதா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"ஏம்மா, நீயும் உன் புருஷனும் எஸ்டேட்டுக்கு வந்து மூன்று மாசத்துக்கு மேலே ஆகி விட்டது. திடீரென்று இப்போது இந்தக் கதை எப்படி முளைத்து வந்தது?"

"ஆனந்துக்கு ஒரு மொட்டைக் கடுதாசி வந்தது. அவர் அதை என்னிடம் காண்பித்தார்.”

"ஒரு மொட்டைக் கடுதாசியை நம்பி, உன்னைப்பெற்ற அப்பனையே நீ சந்தேகப்படலாமா? நாளைக்கு இன்னொரு மொட்டைக் கடுதாசி வரும். அதில், உன் புருஷனுக்கும், ராதாவுக்குமே கள்ள நட்பு என்று எழுதியிருப்பார்கள். உடனே நீ அதையும் நம்பிவிடுவதா? ஒரு பெண்ணுக்கு முதலாவது புருஷன் மீது நம்பிக்கை வேண்டும். இரண்டாவது பெற்றோர்களிடத்தில் மரியாதை வேண்டும். இல்லாவிட்டால் எந்தப் பெண்ணுக்கும் மன நிம்மதி இருக்காது.”

"அப்பா'

"இன்னும் ஏதாவது இருந்தால் சொல்லு! நீ செல்லப் பிள்ளை! உனக்கு எஸ்டேட் நிலவரம் தெரியாது. உனக்கு மட்டும் சொல்லிவைக்கிறேன். ராதா இல்லாவிட்டால் இந்த எஸ்டேட் இல்லை. அவள் நினைத்தால் தொழிலாளர்களை தூண்டிவிட்டு ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தையே உருவாக்கிவிட முடியும். மொட்டைக் கடுதாசியை நம்பி மூளையைக் குழப்பிக் கொள்ளாதே!"

இந்தக் கட்டத்திலாவது உண்மையை உடைத்து--"ராதா ஏற்கனவே திருமணமானவள், ஆனந்து தான் அவளது புருஷன்” --என்று சொல்லிவிட கீதா துடித்தாள். ஆனால் சொல்லிவிட்டால் என்ன ஆகுமோ என்ற அச்சம் அவளைத் தடுத்து விட்டது. கீதா அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை.

"ஒரே செடியில் மல்லிகையும் ரோஜாவும் பூத்தால் கூட வியப்பில்லை; ஒரே வீட்டில் இரண்டு இளம் பெண்கள் ஒற்றுமையாக இருப்பதுதான் வியப்பு" என்று சொல்லிக் கொண்டே படுக்கைக்குப் போனார் சடையப்பர். ஆனால் அவரால் தூங்க முடியவில்லை. புரண்டு புரண்டு படுத்தார். எப்படியோ பொழுது விடிந்தது.

72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/78&oldid=1545806" இலிருந்து மீள்விக்கப்பட்டது