பக்கம்:மிஸஸ். இராதா.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"மாமா!"

"என்ன மாப்பிளே!"

"நானும் கீதாவும் ஊருக்குப் புறப்பட்டுட்டோம்! வந்து மூன்று மாதமாகிவிட்டது. இங்கேயும் பனி அதிகமாகி விட்டது"

“எனக்கும் அது தான் மாப்பிள்ளே யோசனை. கீதாவை நீங்கள்தான் பக்குவப்படுத்த வேண்டும். அவள் எதையும் வினயமாக எடுத்துக்கொண்டு விடுகிறாள்.”

"வதந்திகளை அப்போதைக்கு அப்போது களைந்து விட வேண்டுமென்று நினைக்கிறாள். இதைத் தவிர அவள் மனதில் வேறு கல்மிஷம் இருப்பதாகத் தெரியவில்லை மாமா!"

"ஒரு பெரிய ஆலமரத்தில் சில பழங்கள் வெதும்பி உதிர் கின்றன! இன்னும் சில அழுகிவிடுகின்றன; பலவற்றைப் பறவைகள் கொத்திக் கொண்டுபோய் விடுகின்றன. இதனாலெல்லாம் மரம் பட்டுப் போய் விடுமா? அதுமாதிரித்தான் பெரிய குடும்பங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வதந்திகள் உலாவலாம். அதற்காக என்னையே சந்தேகப்பட்டால் இந்த எஸ்டேட் உருப்படுமா மாப்பிளே!"

ஆனந்த் தலையைக் குனிந்து கொண்டே எதிரே நின்றான்.

இதற்குள்ளாக கீதா பெட்டி படுக்கையுடன் முகப்புக்கு வந்துவிட்டாள்.

"நாங்க ஊருக்குப் புறப்பட்டுட்டோம்பா!"

"நல்லதம்மா!"

எஸ்டேட் பங்களா வெறிச்சோடிக் கிடந்தது. ஆனால் ராதாவின் இதயம் மட்டும் கல்யாணவீட்டுச் சமையலறையைப்போல் புகைமண்டிக் காணப்பட்டது. சடையப்பர் மட்டும் எதையும் மனதில் போட்டுக் கொண்டவராகக் காணப்படவில்லை. வழக்கமான அவருடைய பணிகளில் எந்தத் தேக்கமும் உண்டாக வில்லை.

73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/79&oldid=1545812" இலிருந்து மீள்விக்கப்பட்டது