பக்கம்:மிஸஸ். இராதா.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாக எஸ்டேட் முழுவதும் ஒரே பேச்சாக இருக்கிறது. என்னாலே குடும்பத்திலே குழப்பம் வேண்டாம் என்று யோசிக்கிறேன்!”

“ராதா, குடும்பம் என்பது ஒரு குருவிக் கூடு மாதிரி. அதில் குழப்பமும், பின்னலும் இருந்தால்தான் கூடு வலுவாக இருக்கும், அவர்கள்தான் போய்விட்டார்களே பிறகென்ன குழப்பம்?"

"என்ன இருந்தாலும் கீதாவின் மனம் கசிய நான் காரணமாக இருக்கக்கூடாதல்லவா!"

"நீ தர்க்கம் செய்வது என்று இறங்கினால் நான் உடைத்துப் பேசவேண்டிவரும். பிறகு உன் மனம் தான் கசியும். நீ நிரபராதி என்பதற்கு விசாரணை தேவையில்லை. எனக்கே தெரியும்.”

"எனக்கு எல்லாம் தெரியும் சார்! அதனால்தான் உங்கள் மீது வீண்பழி வேண்டாம் என்று நினைத்து ஊருக்குப் போய்விடலாம் என்று தீர்மானித்தேன். நான் ஊருக்குப் போய்விட்டால் நீங்கள் என்னை விலக்கி விட்டுவிட்டதாக மற்றவர்கள் எண்ணி உங்கள் மீது செலுத்திய தவறான பார்வையை மாற்றிக் கொள்வார்கள். எனக்கும் நல்லது, உங்களுக்கும் பெருமை!

"உன்னேவிட நான் மூத்தவன். என் அனுபவத்தில் கண்ட உண்மை--அவதூறுகளுக்குப் பயப்படுகிறவன் மனிதனாக முடியாது--என்பது தான்.”

"உங்கள் வரை இந்தத் தத்துவம் சரியாக இருக்கலாம். என்னைப் போன்ற ஒரு இளம் பெண்ணுக்கு இது ஒத்துவராத தத்துவம்; ஒரு பெண் மீது தொடர்ந்து சகதி அள்ளி வீசினால் பிறகு அவள் எத்தன முறை குளித்தாலும் பிரயோசனமில்லாமல் போய்விடும்."

"ராதா, இதற்கு மேல் உன்னோடு வாதாடிக்கொண்டிருக்க எனக்கு மனமில்லை. இதோ என் கையாலேயே எழுதித் தந்து விடுகிறேன்; அதை வாங்கிக் கொண்டு போய்விடு!” என்று சொல்லிக் கொண்டே ஒரு வெள்ளைக் காகிதத்தில் ஏதோ இரண்டு வரிகளை எழுதி ராதாவிடம் கொடுத்தார்.

75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/81&oldid=1545815" இலிருந்து மீள்விக்கப்பட்டது