பக்கம்:மிஸஸ். இராதா.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வது அபாயகரமானது. அஞ்சி நடுங்கக் கூடியவர்கள், ஒரு காலத்தில், ஆட்டி வைத்தவர்களின் பரமவைரியாக வந்தே தீருவார்கள். பாம்பு ஏன் தீண்டுகிறது? எங்கே அவன் தன் தலையை மிதித்து விடுவானோ என்று பயந்துதான்! சட்டைக்குள் நுழைந்து பின் தப்பிக்க முடியாமல் தவிக்கும் சிற்றெறும்பு வேறு வழியில்லை என்கிறபொழுது மனிதனையே கடித்துப் பார்க்கிறது. ஆகவே நீ நடுங்காதே! என் உயிருக்கு ஆபத்து வந்து விடப்போகிறது!’ என்றான் கனகன் செல்லமாக!

நீலா மெதுவாக கனகனின் கொண்டையைத் தட்டினாள். அவன் கொண்டையில் சொருகியிருந்த வெள்ளிக் கொண்டை ஊசி கணீர் என்று தரையில் விழுந்தது.

கனகன் புரிந்துக் கொண்டான். ஆம் நீலாவுக்குக் கனகனின் கொண்டை பிடிக்கவில்லை. அது மட்டுமல்ல, அவனது தொழிலே அவளுக்கு பிடிக்கவில்லை. அதை அவனுக்கு சொல்லாமல் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் குறும்புத்தனமாக அவள் அவனது கொண்டையைத் தட்டினாள். அந்த வகையில் நீலா நடந்து கொண்டது கனகனுக்கு திருப்தியைத் தந்தது. ஏனென்றால் கணவன் பக்கத்தில் இருக்கும்போது பெண்கள் கூச்சல் போட்டுப் பேசுவதை அவன் விரும்பாதவன், கணவனின் குரலை மனைவியின் குரல் மிஞ்சும்போது அந்த இல்லத்தின் தலை வாசலுக்கே குதூகலம் தலைகாட்டாது என்பது கனகனின் சித்தாந்தம். அதில் அவன் அசையாத நம்பிக்கை வைத்திருந்தான்.

"நீலா நீ விரும்புவது தவறல்ல. நீ படித்து பட்டம் பெறப் போகிறாய். உனக்கு ஏற்றபடி நான் இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாய் இல்லையா? கிராப்பு வைப்பதற்கும், சில்க் சட்டை அணிந்து துயில்வேட்டி உடுத்துவதற்கும் நேரம் பிடிக்காது. இது சம்பாதிக்கும் காலம்! நீயும் செலவு செய்து பழகிவிட்டாய் திடீரென்று நான் ஆட்டத்தை நிறுத்தினால் நம் க தி என்ன ஆகும்? வீட்டுச் செலவு, படிப்புச் செலவு இவைகளை யெல்லாம் நாம் சரிகட்ட வேண்டாமா? அதற்காக உன் கோரிக்கையைப் புறக்கணித்துவிடவில்லை. விரைவில் நிறைவேற்றி வைக்கிறேன்"

87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/93&oldid=1546128" இலிருந்து மீள்விக்கப்பட்டது