பக்கம்:மிஸஸ். இராதா.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மானத்தையும் வாங்குவதுமாகப் போய்விடும். பெண்மையின் இயல்பு அது!

கனகனின் உள்ளம் ஓயவில்லை. தொடர்ந்து குமுறியது.

"இதற்கு அவள் என்னை வெட்டிக் கொன்றிருக்கலாம்; விஷம் கொடுத்துத் தீர்த்திருக்கலாம். பூவின் மறைவில் இருக்கும் பூநாகத்தை விட புன்னகையில் இடுக்கில் நெளியும் நஞ்சுள்ளம் அவ்வளவு கொடியதா? நான் யாருக்கும் தீங்கு நினைக்கவில்லை. ஆகவே எனக்கு ஒரு போதும் தீங்கு விளையாது! என்னைக் கேவலப் படுத்திய நீலா வெட்கித் தலைகுனியும்படி நான் வாழ வேண்டும். அவள் எதிரிலேயே நான் இன்னொரு பெண்ணை மணக்க வேண்டும். மணந்து குழந்தைச் செல்வங்களோடு வாழ வேண்டும்."

கனகனின் கால்கள் ஒண்டிப்புலியா பிள்ளை வீ ட்டுக்கு நடந்தன. அவர் பாக்குரலைத் தட்டிக் கொண்டிருந்தார். அந்தப் பெரியவர் கனகனைப் பார்க்கச் சஞ்சலப்பட்டார். 'நானாக இருந்தால் தூக்குப் போட்டுக் கொண்டு செத்திருப்பேன். ஒரு வேளை நீலா, கனகனைப் பற்றிச் சொல்லியது உண்மையாக இருக்குமோ! ஒரு பெண், தன் கணவனை இதற்குமேல் அவமானப்படுத்த முடியாது. இதைக் காட்டிலும் கொடிய ஆயுதம் எந்தப் பெண்ணுக்கும் கிடைக்காது' என்று ஒண்டிப்புலியா பிள்ளை தனக்குள்ளே பேசிக் கொண்டார். அப்போது கனகன் உள்ளே புகுந்தான்.

"முடிவுக்கு வந்துவிட்டேன் பெரியவரே! இதற்கு பஞ்சாயத்து அபராதம் எதுவும் நான் கேட்கவில்லை. திருவனந்தபுரத்திற்கு நான் ஆட்டத்திற்காகப் போயிருந்த போது அங்கே ஒரு பெண் வந்திருந்தாள். அவளும் கரகம் ஆடத்தான் வந்திருந்தாள். என்னை பிரம்மச்சாரி என்று நினைத்து அவளை கல்யாணம் செய்துக் கொள்ளச் சொல்லி கெஞ்சினாள். அவளையே திருமணம் செய்துக் கொள்ளத் தீர்மானித்து விட்டேன். அதற்கு உங்கள் ஆசி தேவை” என்றான் கனகன்.

பெரியவர் முதலில் சற்றுத் திகைத்தார். நீலாவின் குற்றச்-

90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மிஸஸ்._இராதா.pdf/96&oldid=1546133" இலிருந்து மீள்விக்கப்பட்டது