பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

விந்தன்

தகப்பனார் அவரைக் குனிந்து பார்க்க, ‘ஒருவேளை காக்கா வலிப்பா யிருக்குமோ? எதற்கும் சாவிக் கொத்தை அவருடைய கையிலே திணித்துப் பாருங்கள், அப்பா!’ என்று பொன்னி சொல்ல, ‘காக்கா வலிப்பாயிருந்தால் இப்படி ஆடாமல் அசையாமல் இருக்க மாட்டாரே? இழுத்துப் பறித்துக் கொண்டிருப்பாரே!' என்று அவர் சொல்ல, அதற்குள் கீழே விழுந்த கீலீஸ்காரர், 'அதெல்லாம் ஒன்றுமில்லை; அந்தப் பெண்ணின் அழகு...அந்தப் பெண்ணின் அழகு...’ என்று திக்கிக்கொண்டே தட்டுத் தடுமாறி எழுந்து உட்கார எந்தப் பெண்ணின் அழகு?' என்று ஒன்றும் புரியாமல் பொன்னியின் தகப்பனார் கேட்க, ‘உங்கள் பெண்ணின் அழகுதான்!' என்று கீலீஸ்காரர் சொல்ல, 'ஆமாம், என் பெண்ணின் அழகுக்கு என்ன?’ என்று அவர் மேலும் குழம்பிக் கேட்க, ‘அதுதான் என்னை அப்படியே மூர்ச்சையடையச் செய்துவிட்டது!’ என்று ஒரு கண்ணால் பொன்னியையும், இன்னொரு கண்ணால் அவளுடைய தகப்பனாரையும் பார்த்துக் கொண்டே சொன்னபடி கீலீஸ்காரர் எழுந்து நிற்க, 'ஆளைப் பார், ஆளை!' என்று அந்தக் கீலீஸ்காரரைத் தன் கண்ணால் ஒரு வெட்டு வெட்டிக்கொண்டே பொன்னி அடுப்பங்கரைக்குள் ஓடி ஒளிவாளாயினள்.

அவள் ஓட்டத்தைக் கண்ட தகப்பனார், ‘ஹஹ் ஹஹ்ஹா!' என்று சிரிக்க, கீலீஸ்காரர், ‘ஹிஹ்ஹிஹ்ஹி!’ என்று சிரிக்க, 'இவன் அவளுடைய அழகைப் பார், அழகை’ என்கிறான்; அவள் இவனை 'ஆளைப் பார், ஆளை!’ என்கிறாள். 'இதற்கு என்ன அர்த்தம்?’ என்று ஒரு கணம் யோசித்த தகப்பனார், மறுகணம், 'காதல், கீதல் என்று சொல்கிறார்களே, அதற்கு ஒரு வேளை இது ஆரம்பமாயிருக்குமோ?’ என்று நினைக்க, அதற்குள், ‘உங்கள் பெண்ணை நீங்கள் வெளியே அனுப்புவதுண்டா?' என்று