பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

51

இருக்கும். அவன் அப்படியெல்லாம் இருந்தும் அவனுடைய மனைவி பிரேமாவுக்கு ஏனோ ஏகாம்பரம் என்பவனின் மேல் கொள்ளை ஆசை இருந்தது. பீதாம்பரம் ஊரில் இல்லாத சமயங்களில் அவள் ஏகாம்பரத்துடன் ஊர் சுற்றுவாள்; கடற்கரைக்குப் போவாள்; நடனம், நாடகம், சினிமா எல்லாவற்றிற்கும் போவாள். கடைசியாக, அவனைத் தன் வீட்டுக்கே தைரியமாக அழைத்துக் கொண்டு வந்து அவனுடன் கொஞ்சுவாள்; குலாவுவாள்; எல்லாம் செய்வாள்.

இவள் இப்படி இருக்குங் காலையில், ஒரு நாள் இரவு எதிர்பாராத விதமாகப் பீதாம்பரம் வந்து சேர்ந்தான். ‘என்ன, இப்படித் திடீரென்று வந்து நிற்கிறீர்கள்?’ என்றாள் அவள், திடுக்கிட்டு.

‘உன்னைப் பார்க்கவேண்டும், பார்த்துப் பேசவேண்டும், பேசிச் சிரிக்கவேண்டும்' என்று அவன் அவளை அணைத்துக் கொண்டு, ‘ரெயிலில் வந்திருந்தால் நாளைக் காலையில்தான் வந்திருக்க முடியும். அதுவரை உன்னைப் பார்க்காமலிருந்தால் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும்போல் இருந்தது; நான் வருவதற்கு முன்னால் ஸ்டாண்டை விட்டுப் புறப்பட்டுவிட்ட பஸ்ஸை விரட்டிப் பிடித்து ஏறி வந்தேன். இதோ பார்த்தாயா, கால் முட்டியில் அடிகூடப் பட்டு விட்டது' என்று அவன் தன் 'வீரசாகச'த்தால் தனக்கு ஏற்பட்ட 'விழுப்புண்'ணை அவளுக்குத் தொட்டுத் தொட்டுக் காட்டினான் .

அவளோ, ‘இது என்ன தொல்லை, இன்றிரவு நான் அவரை வரச்சொல்லி இருக்கிறேனே!' என்று ஏகாம்பரத்தை நினைத்தவளாய், 'அப்படி என்ன அவசரம், ராஜா! கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போய்விடும்?’ என்று அவன் தலையை ஒர் 'அட்வான்ஸ் தடவு' தடவி, மேலே என்ன செய்வதென்று யோசிப்பாளாயினள்.

‘என்ன யோசிக்கிறாய், பிரேமா?’ என்றான் பீதாம்பரம்.