பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்கில ஏடுகளில் ஆசிரியர்கட்கு கடிதம் எழுதுவோரை அமெரிக்கர்களின் ஆய்வினை வைத்துக் கவிஞர் காலை வாருவதை படித்து ரசியுங்கள். ராஜாஜியின் இந்தத் தேசத்தைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும்' என்ற வாசகத்தை அவருக்கு எதிராக திருப்பிவிடும் இலாவகம் மீராவுக்குரியது. அதைப் பொறுத்தருளிய அக்கால அரசியல் சூழல் எவ்வளவு அருமை என்று வியக்கத் தோன்றுகிறது. படித்த பத்தாம்பசலிகளை பாமர விவசாயிகளுடன் கவிஞர் ஒப்பிட்டுத் தோலுரிக்கிறார். ஒரு துண்டு நிலம் வைத்துள்ள. விவசாயிகூட IR 8, கருணா என்று புது நெல் விதைத்துப் போதிக்க தயாராக இருக்கும்போது ஆங்கிலப் படிப்பாளிகள் சநாதன வேலிகளுக்குள் கிடப்பதை நயமாகச் சுட்டுகிறார். இந்நூலில் உள்ள ஜெயகாந்தன் பற்றிய இரு கட்டுரைகள் சிறப்பானவை. ஜெயகாந்தன் நம் நிகழ்தமிழ் இலக்கியத்தின் பெரும்கொடை. நாம் இதுவரை நோக்காத புதுப்பார்வைப் புலத்தை நுட்பமாகக் காட்டி ஜெயகாந்தனைச் சரியாக வெளிப்படுத்துகிறார் மீரா. ஜெயகாந்தனின் பெருமையை மறைத்து தம்மை நிலை நிறுத்திக்கொள்ள நினைக்கும் இலக்கியத்திற்கு எதிரான விஷமக் கும்பல்கள் தலைகாட்டத் தொடங்கும் இந்நாளில் ஜெயகாந்தன் பற்றிய மீராவின் புரிதல் இளம் வாசகர் எழுத்தாளர்க்கும் உதவும். பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை, சிற்பி பற்றிய கட்டுரைகளில் கவிஞரின் விமர்சனப் பார்வை சிறப்பாக வெளிப்படுகிறது. தமிழ்க் கவிதை இலக்கியத்தில் தோய்ந்தவர் பேராசிரியர் கவிஞர் மீரா. எனவே பாரதியின் பிள்ளைக் காதல், பாரதிதாசனின் புதுநோக்கு, பட்டுக்கோட்டையின் சமூகநேயப் பாட்டு, சிற்பியின் தலித்தியக் கவிதைகள் ஆகியன பற்றிக் கவிஞர் வழங்கும் குறிப்புகள் விமர்சனப் பெருமை பெறுவன. பழம்தமிழ்க் கவிதையில் உள்ள வாய்மொழி பற்றிய கட்டுரை மிகச்சிறந்த கட்டுரை. சங்க இலக்கியத்தில் உள்ள கவிதைகளை வாய்மொழிக் கவிதைகள் என்று வழங்குவதற்கு எதிர்ப்புகள் உள்ளன. மீராவே வாய்மொழி மரபில் வந்தவை சங்கப் பாடல்கள் என்பதை அற்புதமாகக் காட்டுகிறார். வாய்மொழி மரபின் தொடர் படைப்புத் தன்மையினை 'வாய்மொழிப் பாடல்கள் வாய்க்கு வாய் வேறுபடும்' என்று சிறப்பாக எடுத்துக் காட்டுவதுடன் இன்றுள்ள வாய்மொழிப் பாடல்களில் சங்கக் கவிதையின் அகமரபுத் தொடர்ச்சியினையும் காட்டுவது சிறப்பு.