பக்கம்:முகவரிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்னின்கா தனது முன்னாள் நாடகமேடை வாழ்க்கையையும் இந்நாள் எஸ்டேட் வீட்டு வாழ்க்கையையும் மாறிமாறி நினைத்துப் பொருமுகிறாள்.

"செல்வமும் செல்வாக்குமாக வாழ்ந்த குடும்பம் என்ன ஆயிற்று? பாட்டனார் செத்தார். பாட்டி செத்தாள். அவளுக்கு முன்பே மாமன்மார் இருவர் செத்தனர். தாயார் தங்களை அனாதையாக விட்டுச் செத்தாள். வொலோ டெங்காவும் பெடங்காவும் செத்தனர். கடைசியில் லூபின்காவும் செத்தாள். அந்தக் குடும்பத்தில் எஞ்சியிருப்பது கிழட்டுப் போர்பிரியும் அவளும்தானா? அவர்களிருவரும் தான் இன்னும் எவ்வளவு காலத்திற்கு உயிரோடிருக்கப் போகிறார்கள்? சீ! சீ! இது என்ன வீடா, அல்லது சுடுகாடா??"

அன்னின்கா நினைப்பதுபோல் அது சுடுகாடுதான். ஒவ்வொரு வினாடியும் கொலோவா குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்களுக்குக் குழிபறித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். உதவாக்கரை போர்பிரி தனக்கு மட்டுமல்லாமல் கொஞ்சம் தாராள மனத்தோடு மற்றவர்களுக்கும் குழிபறிக்க உதவியிருக்கிறான்.

அசட்டுக்கற்பனையும் வெட்டிப்பேச்சும் அவனுக்கே உரிய அலாதியான குணங்கள். கருமித்தனமும் சோம்பேறித் தனமும் அவனுக்குக் கிடைத்த சீதனங்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் கோவிலுக்குப் போவான்... ... மற்ற நாட்களில் “நூற்றுப் பன்னிரெண்டு ரூபிளையும் பத்து ரூபிளையும் கூட்டி... ... " என்று கணக்குப் போடுவான்.

எப்போதாவது நேரமிருந்தால் யாரைப் பற்றியாவது மொட்டைக் கடிதம் எழுதிப் போடுவான்.

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/39&oldid=968495" இலிருந்து மீள்விக்கப்பட்டது