பக்கம்:முகவரிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சின்னான் வீட்டு மண் சட்டியில் இருந்தாலும், வினை, திறமும் வேலைப்பாடும் பொருந்திய சீமான் வீட்டு, கூஜாவில் இருந்தாலும் தண்ணீர் தண்ணீரே. அதுபோல் மரபுக்குள் இருந்தாலும் மரபு மீறி நின்றாலும் கவிதை கவிதையே. இன்றைய புதுக்கவிதைகளோடு தம்மைப் பிணைத்துக் கொண்டவர்கள் என்பதற்காகப் பழைய நல்ல மரபுக்கவிதைகள் மீது விசுவாமித்திரப் பார்வையும் வேண்டியதில்லை. பழைய கவிதைகளிலேயே தோய்ந்து போன பண்டிதர்கள் என்பதற்காக மரபு மீறிப் பிறக்கும் உண்மைக் கவிதைகளிடத்து நக்கீரப் பார்வையும் தேவை யில்லை. இவ்விரு கட்சியிலும் சாராத நடுநிலையாளர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

அப்படிப்பட்ட வாசகர்களில் ஒருவனாக இருந்து தோழர் முத்துராமலிங்கத்தின் கவிதைகளைப் படித்து முடித்த எனக்கு ஏமாற்றமில்லை. தனிமனித வழிபாட்டுக்கும், அற்பசொற்ப விவகாரங்களுக்கும், தன் கவிதைத் தொகுதியின் பாதிக்கு மேற்பட்ட பக்கங்களை வீணடித்து விடாமல் இன்றைய சமுதாய, பொருளாதார, அரசியல் நிலைகளைப் பாடும் கவிஞராய் இவர் காட்சியளிக்கிறார்.

   'பழமைப் பெருமை தன்னைப்
    பாட்டாகப் பாடாமல்
    நிலைமைதனை நிர்ணயிக்கும்
    நிகழ்காலச் சுவடுகள் நாம்!'

என்னும் வரிகள் என் கருத்தை உறுதிப்படுத்தும்.

சில பொருட்களின் புற அழகே நம்மைப் புல்லரிக்கச் செய்வதுபோல் கவிதைச் சுவையை நுகர்வதற்கு முன் தலைப்புகளே நம் கவனத்தைச் சில வினாடிகள் இழுத்து நிறுத்துகின்றன. "நாம்... நாம்... வியட்நாம்!', 'மனிதனை நேசிப்போம் நாம்!', 'வானம் பார்த்த வரப்புகள்' ஆகியவற்றை உதாரணமாய்ச் சொல்லலாம்.

92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/93&oldid=970649" இலிருந்து மீள்விக்கப்பட்டது