பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

மெல்லியலாள் தன்மனையாள் எனவும் எண்ணான்
மேலுமொரு பதினாலான் டவளும் கானில்
அல்லலடைந் தாளென்றும் கருதல் செய்யான்
ஆரணங்கு கருவுற்றாள் எனவும் பாரான்
மல்குசின மேகொண்டான் ஊரார் சொன்ன
மாற்றமொன்றே மதித்தானச் சனகன் பெண்ணைச்
சொல்லரிய துயரோடு கானம் ஏகச்
சொன்னான்அக் குடும்பத்தில் பிரிவும் கண்டான்

13


உரைத்திடுவர் ஊரார்கள் தங்க ருத்தை
ஒன்றுக்கும் செவிசாய்த்தல் கூடா தன்னோர்
உரைப்பதனைச் செவிமடுத்தால் குடும்ப வாழ்வில்
உலைவுவரும் உண்மையிது; புளியைப் பாலில்
கரைக்காதீர் பிறருரையைக் கேட்டு வாழ்வில்
கலங்கிமிகத் துயருழந்து சாக வேண்டா
குரைக்கின்ற ஒலிகேட்டுக் கதிரோன் வானில்
குறுகுவதற் கஞ்சுவனோ? அவன்போல் வாழ்வீர்

14


உரைத்தவெலாம் ஆண்பாலர் செயலே ஆகும்
ஊராருள் பெண்ணினமோர் அங்கம் அன்றோ ? மறைப்பின்றி அவர்செயலும் சொல்லு கின்றேன்:
மாமியிடம் சென்றோர்பெண் அவள்ம னத்தைக்
கரைத்திடுவாள் மருமகளைக் குறைகள் சொல்வாள்
'கண்டபடி உனைவைதாள் மதிக்க வில்லை
விறைப்போடு திரிகின்றாள் அடக்கம் இல்லை
வீதியெலாம் கைகொட்டிச் சிரிக்கு' தென்பாள்

77