பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14



விரவிப் படிப்பவர்களைப் பண்புள்ளவர்களாக்கும் பான்மையுடன் திகழ்கின்றன. இவற்றைக் குறை என எண்ணு வோர் இருந்தால், அவர்கள் நெஞ்சம் இனியேனும் நிறைவுறுக என வாழ்த்துவோம்.

V

கவிதையை மதிப்பிட அதன் வடிவம், கற்பனை கருத்து, நடை, சொல்லாட்சி, உணர்ச்சி, உணர்த்தும் முறை, அணி நலம், சுவை-இனையன பல அளவுகோல் களாகும். இவை அனைத்தையுமே கொண்டு எல்லாக் கவிதைகளும் விளங்குவன என எண்ணுதல் கூடாது. ஒரு கவிதைக்கு நிலைத்த வாழ்வும் பெரும் புகழும் தர, இவற் றுள் சில கலங்கள் மட்டும் அமைந்திருந்தாலும் போதும் ஒன்றிரண்டு பகுதிகள் மட்டும் தனிச் சிறப்புடன் அமைத்திருந்தாலும் போதும்.

கவிஞர் முடியரசனின் கவிதைகளைக் கற்பவர்கள், இவற்றுள் பல கலங்களையும் பெற்று அவை விளங்குவதை உணர்வர். வற்றாத கருத்தென்னும் வளமான கடலின் கண், அரிய உணர்வென்னும் ஆராத அலைமேலே பாட்டுத்திறத்தோடு மனங்கவரும் கற்பனையாம் பாய்மரத்துக் கலமேற்றி, எழிலே உருவான இன்பக் கரை நோக்கி நம்மை யெல்லாம் அழைத்துச் செல்லும் இலக்கியம் இது.
வண்டுகள் மலர் தோறும் சென்று தேனை உண்டு வருவது,

'கடன்பட்ட மாந்தரிடம் வட்டி கேட்கக்
 கடைதோறும் புகுந்துவரும் கணக்கனைப்போல்'