பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

சென்றஎன் முன்ஓர் நங்கை
செயல்மறந் தழுதல் கண்டு
கன்றின முகத்தாய்! ஏனோ
கலங்கிய விழியோ டிங்கே
நின்றிடு கின்றாய்? அம்மா!
நிலைஎனக் குரைப்பாய் நீயார்?
என்றலும் அவளும் ஒப்பி
இயம்பினள் கண்ணீர் வார

4


"வேங்கடம் குமரி நாப்பண்
வெற்றியின் கொடிப றக்க
யாங்கணும் பகையே யின்றி
யான்அர சோச்சி வந்தேன்
தீங்கென எவருஞ் செய்யின்
தீயென வெகுண்டெ ழுந்து
பாங்குடன் வேந்தர் காக்கப்
புலவர்கள் பாட வாழ்ந்தேன்

5


மலைகடல் ஆறு வானம்
மாலையில் கதிரோன் காட்சி
அலைவுறும் மேகம் காதல்
அகப்பொருள் அஞ்சா வீரம்
கலைமதி என்னும் இன்ன
காசினி இயற்கை எல்லாம்
நிலைபுகழ்ப் பாட லாக்கி
நின்றடி பணிய வாழ்ந்தேன்

136