பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் [57] அவர் உரையாற்றும் பொழுது, சங்கஇலக்கியப் பாடல்கள் சிலவற்றைக் கூறி, 'இதெல்லாம் ஒரு தமிழ்நடையா? கரடு முரடான நடையைக் கட்டியழுகிறார்களே! மொழி வெறி பிடித்துத் திரிகிறார்கள். இந்த மொழி வெறி தொலைய வேண்டும்' என்ற கருத்துப்படக் கிண்டல் செய்து பேசி விட்டார். தமிழைப் பழித்தால் அதுவும் சங்க இலக்கியங்களை இகழ்ந்தால் நான் உணர்ச்சி வயப்படக் கூடியவன். என் மனந்துடிக்கிறது. இந்நிலையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுந்து, வளையாபதி அடிகள் கூற்றை வழி மொழிவது போலப் பேசி விட்டு, மொழி வெறி கூடாது என்ற கருத்துப்படப் பேசி விட்டார். எனக்குத்துடிப்பு மிகுந்துவிட்டது. நம் அடிகளாருமா இப்படிப் பேசுகிறார்! ஏன் இப்படிப் பேசுகிறார்? என ஒன்றும் விளங்காத நிலையில்துடித்துக் கொண்டிருந்தேன். அடிகளார்.தமது கருத்துரையை முடித்துக் கொண்டு, என்னைப் பேச அழைத்தார். எழுந்தேன். நம் மதிப்பிற்குரிய வளையாபதியடிகள் சொற்பொழிவை முன்னர் ஒருகால் பெரியகுளம் என்னும் ஊரிற் கேட்டு மகிழ்ந்தவன் நான். அன்று தமிழின் அருமை பெருமைகளை யெல்லாம் எடுத்து விளக்கினார். சாதிச் சழக்குகள் கூடாது என்று சாடினார். சாதி யொழிய நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் வழிகள் கூறினார். அத்தகு தமிழ் மகனா? அத்தமிழ் நெஞ்சமா? இன்று சங்க இலக்கிய நடையைச் சாடுகிறது? இஃது எனக்கு வியப்பாகவே இருக்கிறது. அன்று அப்படிப் பேசியவர் இன்று இப்படிப் பேசுகிறாரே! ஏன்? இடத்திற்குத்தகுந்தவாறுபேசுகிறாரா? அப்படிப்பேசுவதுவளையாபதி அடிகள் போன்றார்க்கு அழகாகுமா? அன்றி முதுமையால் முரண் படப் பேசுகிறாரா? ஒன்றுமே விளங்க வில்லையே. சரி, போகட்டும்; மொழி வெறிகூடாது என்று கூறுகிறாரே, அறிவுள்ளவன் எவனாவது இந்த நாட்டிலே மொழி வெறி இருக்கிறது என்று சொல்ல முடியுமா? குன்றக்குடி அடிகளாரும் இங்கு மொழி வெறி இருப்பது போலப் பேசுகிறாரே! நெஞ்சிற் கைவைத்துச் சொல்லுங்கள், இந்த நாட்டில் மொழி வெறி இருக்கிறதா? என்று.