பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் o 105 இயலவில்லையென மடல் எழுதிவிட்டார். திருமண ஏற்பாடுகளை, இராம. கலியாணசுந்தரமும் பொன்னி நிறுவனத்தாரும் கவனித்துக் கொண்டனர். திருமண அழைப்பு மிகமிகச் சிறியது. திருமண அழைப்பில் மணமக்களே கையொப்ப மிட்டிருந்தோம். இடப் பக்கத்தில், "வண்ணப்பூவும் மணமும் போலே மகர யாழும் இசையும் போலே கண்ணும் ஒளியும் போலே - எனது கன்னல் தமிழும் நானும் அல்லவோ என்ற பாவேந்தரின் பாடல் வரிகளை வெளியிட்டிருந்தேன். இன்று வரை நாங்கள் அவ்வாறே வாழ்ந்து வருகிறோம். திருமணத்தில் வாழ்த்துரை வழங்கிய கலியாணசுந்தரம், நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் மகப்பேறு நிகழ வேண்டும் எனக் கூறினார் என் 29 ஆம் அகவையில் திருமணம் நடை பெறுகிறது. அதனால் நான்காண்டு என்ற கால வரம்பை இரண்டாண்டாகக் குறைத்துக் கொள்ள வேண்டினேன். ஆனால் அடுத்த ஆண்டே ஒரு பெண் மகவுக்குத்தந்தையானேன். குழந்தைக்குப் பெயர் சூட்ட நாள் குறித்து என் மைத்துனர் காரைக்குடிக்கு மடல் எழுதியிருந்தார். குழந்தைக்குப் பூங்கொடி எனப்பெயர் சூட்ட எண்ணிக் குறித்த நாளில் புதுக்கோட்டைக்குச் சென்றேன். ஆனால் முதல் நாளே, ஐயரை அழைத்து வந்து புஷ்பவல்லியென்று பெயர் வைத்து விட்டார்கள். நான் தடை செய்வேன் என்று கருதி, நாளை மாற்றி யெனக்கு எழுதிச் சூழ்ச்சி செய்து விட்டனர். கடுமையாகச் சினந்து கொண்டேன். 'நடந்தது நடந்து விட்டது. புஷ்பவல்லி என்றாலும் பூங்கொடி யென்றாலும் ஒன்றுதானே. நீங்கள் பூங்கொடி யென்று மாற்றிக் கொள்ளுங்கள் என அண்ணன் சண்முகம் அமைதி கூறினார். ஐயர் வந்து வடமொழியில் பெயர் வைப்பது? அதன் பிறகு அதை நான் மாற்ற வேண்டுமோ? முடியாது, குமுதம்' என்றுதான் அழைப்பேன் என்று அப்பெயரையே சூட்டி விட்டேன். காரைக்குடிக்கு வந்த பின்புதான் அதுவும் வட சொல் எனத் தெரிந்து வருந்தினேன்.