பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[9] Gதாழமைப் புறா தோழமையுள்ளம் இளமையிலிருந்தே நட்பைப் பேணிக்காக்கும் இயல்பு எனக் குண்டு. தொடக்கப் பள்ளித் தோழர்களும் இன்றுவரை, இடையறாது பழகி வருகின்றனர். அவருள் து. வெள்ளைச்சாமி, கு.கந்தசாமி, சுப.சண்முகசுந்தரம், க.நாகராசன் முதலியோர் தலைசிறந்தோராவர். இன்றும் என்னை ஒருமையில்தான் அழைப்பர். அவ்வளவு உரிமை எங்களிடம் வளர்ந்துள்ளது. வெள்ளைச்சாமி, சண்முகசுந்தரம் இருவரும் வணிகத்துறையில் ஈடுபட்டுவிட்டனர். புலவர் கந்தசாமி அழுத்தமான திராவிட இயக்கப் பற்றுடையவர். பயில்கின்ற காலத்திலேயே அச்சிட்ட கடிதத்தாளில் கு.கந்தசாமி ஐயர் (திராவிடர்) என அச்சிட்டிருப்பார். தமிழனுக்குத்தான் ஐயர் என்று போட்டுக் கொள்ளத் தகுதியுண்டு என வாதிடுவார். புலவர் வகுப்பில் நான் படித்துக் கொண்டிருந்த பொழுது பல்வேறு காரணங்களாற் படிப்பிற் சற்றுக் கவனக்குறைவாக இருந்தேன். நன்கு படிக்கவில்லையே என்று பலரும் என்னைக் கடிந்துரைப்பர். அதன்பொருட்டு, மனம் வருந்திக்கட்டளைக் கவித்துறைப் பாடலொன்று பாடினேன். (அப்பொழுது நான் முருகனிடத்தில் ஈடுபாடு கொண்டிருந்தேன்) அப்பாடல் இதோ, பெற்றார் உயிரென நட்டார் பெரியர் சிறியரெலாம் கற்றா னிலைசீ எனஎற் கடிந்தே இகழ்ந்துரைக்கச் சற்றா கினுமதைத் தாளேன் சிறையில்நக் கீரனுக்கா உற்றாய் தமிழினைப் பெற்றாய் கலைஎற் குதவுவையே.