பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 33 யுடன் வாழலாம். முதலிருபதில் உரிமையாக வாழ விரும்பினால், பின்னைய எண்பதும் அடிமையாகவே இருக்க வேண்டிவரும் என ஒரறிஞர்கூறியதாக நினைவு. இன்றைய இளைஞனுக்குத் தொடக்கமே ‘சுதந்திர உணர்வுதானே மேலோங்கி நிற்கிறது. அதனால் கால மெல்லாம் அடிமையாகிச் சாகிறான் உரிமை, அடிமை என்னுஞ் சொற்களுக்கு உண்மைப் பொருள் தெரிந்து கொள்ள முயலாமை யால் வந்த விளைவு! உளங்கவர்ந்தவர் 1939 இல் தமிழ்க் கல்லூரியாக மாறியதும் வீர செல்லப்பனார் முதல்வராகப் பொறுப்பேற்றார். அதன் பின் மாணவர்கள் பலகையில் அமர்ந்து பாடங்கேட்கும் நிலை பெற்றோம். செல்லப்பனார் அமைதியின் வடிவமானவர் எப்பொழுதும்படிப்பார்வங்கொண்டவர்; அன்பாகப் பழகும் இயல்பினர்; எவ்வகையாலும் மேல் கீழ் என்ற வேறுபாடு கூடாதென்பவர்; தூயவுள்ளத்தினர்; உலகம் இதுவெனக் காட்டி யுணர்த்தியவர்; வரலாறுகள், சான்றோர் வாழ்க்கைகள் இவற்றை எடுத்தெடுத்துக் கூறி எம்மைத் தெளிவித்தவர்; எமதுள்ளங் களை விரிவுபடுத்தியவர் என் வாழ்க்கைக்குத் திருப்பு முனையாக இருந்து உதவியவர். - அவர்தம் இனிய மனமும் அமைதியான வாழ்க்கையும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அதனால் அவரிடம் பெருமதிப்புக் கொண்டேன். அவர்தம் இல்லத்தாருடன் பழகும் வாய்ப்பும் பெற்றேன். அக்காலத் திலேயே குழந்தைகளிடம் எனக்கு ஈடுபாடு உண்டு. அவருக்குக் காந்தி என்ற அழகிய குழந்தையுண்டு. அக்குழந்தையை அடிக்கடி எங்கள் இல்லத்துக்கு எடுத்து வந்து கொஞ்சி விளையாடுவேன். அவர் உடல் நலங்குன்றியிருந்த பொழுது, நான் என் தந்தைக்குச் செய்வது போலப் பணிவிடைகள் செய்து, அவர் நலம் பெறும் வரை உதவி நின்றேன். அதனால் என்னிடத்தில் அக்குடும்பமே பேரன்பு செலுத்தியது. இன்றும் அவ்வன்பு நிலைத்து நிற்கிறது. கம்பம் புதுப்பட்டிதான் அவர் வாழும் ஊர். அவர் முதுமை எய்தி, எழுத இயலா நிலையிலும் கூட அண்மையில் எனக்கு நான்கு பக்க மடல் எழுதினார். பழைய நிகழ்ச்சிகளை யெல்லாம் நினைவு கூர்ந்து, என்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் எழுதியிருந்தார்.