பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 வேறுபாடுகள் இருப்பினும் நாங்களும் கண்ணுங் கருத்துமாக அவற்றைக் கேட்டுக் கேட்டு மகிழ்ந்தோம். நற்பயனும் பெற்றோம். ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர். அவரே என்பதில் ஐயமில்லை. அத்தகு சான்றோரைக் கண்டு, அவர்தம் வாய் மொழி கேட்டு அவருடன் பழகி அவர் தந்த அறிவுப்பாலை அருந்திப் பயன் கொள்ளும் பேறு பெற்றமையை இன்றும் எண்ணி யெண்ணி இறும்பூது கொள்கின்றேன். மூன்றாம் நாள், பேச்சின் முடிவில் எமக்கு நல்கிய அறிவுரை ஒன்றுண்டு. எம்மை நோக்கி நீங்கள் அழகாக இருக்க விரும்பு கிறீர்களா?' என வினவினார். அழகை விரும்பா இளைஞரும் உண்டோ? நாங்கள் அனைவரும் ஒரு சேர ஆம் எனத் தலையசைத் தோம். 'அழகை நீங்கள் விரும்புவது உண்மை யெனின் திருவாசகம் ஒதுங்கள்’ என்றார். எங்களுக்கு ஒரே வியப்பு என்ன இது? புதுமையாக இருக்கிறதே! திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்று தானே கூறுவர்! திருவாசகம் படித்தால் அழுகை தானே வரும்; அழகா வரும்? என்று மனத்துள் நினைந்து கொண்டு, அவரையே உற்று நோக்கினோம். ஆம்: ஐயம் வேண்டா மேலை நாட்டில், படித்தால் அழகு தரும் நூல்கள் எனச் சில நூல்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அவ்வடிப்படையில் படித்தால் அழகு தரும் நூலொன்று தமிழில் உண்டா என ஆயின், அத்தகு நூல் திருவாசகம் ஒன்றே என்பது புலனாகும். ஆதலின் பயில்க! இடையறாது பயில்க!' என அன்பு தவழக்கூறிப் புன்னகை செய்தருளினார். அப்புன்னகை முகம் அப்படியே என் மனத்திற் பதிந்துள்ளது. 1943 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் நாள் ஆத்தங்குடி யென்னும் ஊரில் ஒரு பெரு விழா. அன்பும் பண்பும் இணைந்து ஒர் உருக் கொண்டாற் போன்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்கட்குப் பாராட்டு விழா. அரண்மனை எனத்தக்க அழகும் தோற்றமும் கொண்ட ஒரு மாளிகையில் அவ்விழா நடைபெற்றது.