பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

முதற் குலோத்துங்க சோழன்

“ஆதிக் கேழ லாகி யெடுத்தன்ன
யாதுஞ் சலியா வகையினி தெடுத்துத்
தன்குடை நிழற்கீ ழின்புற விருத்தி"

எனவும்,

"தென்றிசைத்
தேமரு கமலப் பூமகள் பொதுமையும்
பொன்னி யாடை நன்னிலப் பாவை
தனிமையுந் தவிரவந்து புனிதத்
திருமணி மகுடம் உரிமையிற் சூடி"


எனவும் வரும் முதலாங்குலோத்துங்க சோழன் மெய்க் கீர்த்திகளாலும் உணரலாம்.

சோழநாடு அரசனின்றி நிலைகுலைந்திருந்த செய்தியையறிந்து வடபுலத்திலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு விரைந்துவந்த இராசேந்திரனைக் கண்ட அமைச்சர் படைத்தலைவர் முதலான அரசியலதிகாரிகள் எல்லோரும் இவ்வரசகுமாரன் தக்க சமயத்தில் வந்தமைக்குப் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்கள். சோழர் மரபில் முடி சூடுதற்குரிய அரசகுமாரர் எவருமில்லாமையாலும் கங்கைகொண்ட சோழனுடைய மகள் வயிற்றுப் பேரனாம் உரிமை இவனுக்கிருத்தலாலும் இவ்விராசேந்திரனே சோழநாட்டின் அரசனாக முடிசூடும் உரிமையுடையோன் எனவும் உறுதிசெய்தனர். அங்ஙனமே இவனுக்கு முடிசூட்டுதற்குத்தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன, கி. பி. 1070-ஆம் ஆண்டு சூன் திங்கள் 9-ஆம் நாளில் கங்கைகொண்டசோழபுரத்தில் இவன் முறைப்படி முடிசூட்டப்பெற்றான். அந்நன்னாளில் இவன் குலோத்துங்க சோழன் என்னும் அபிடேகப் பெயரும்