உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

முதற் குலோத்துங்க சோழன்

ஆகும் என்பது தஞ்சையிலுள்ள இராசராசேச்சுரத்திற காணப்படும் ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது.[1] இங்குக் குறிக்கப்பெற்றுள்ள வளநாடுகளின் பெயர்கள் எல்லாம் முதல் இராசராசசோழனுடைய இயற்பெயரும் பட்டப் பெயர்களுமேயாகும். நம் குலோத்துங்க சோழன் தன் ஆட்சிக் காலத்தில் இவ்வளநாடுகளுக்குரிய பெயர்களை நீக்கிவிட்டுத் தன் பெயர்களை அவற்றிற்கு இட்டனன். க்ஷத்திரிய சிகாமணி வளநாடு என்பது குலோத்துங்கசோழ வளநாடு என்னும் பெயருடையதாயிற்று. இராசேந்திர சிங்க வளநாடு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது ; அவற்றுள் மேற்கிலுள்ள பகுதி உலகுய்யவந்த சோழ வளநாடு எனவும் கிழக்கிலுள்ள பகுதி விருதராச பயங்கர வளநாடு எனவும் வழங்கப்பட்டன. உலகுய்யவந்தான், விருதராசபயங்கரன் என் பன நம் குலோத்துங்கசோழனுடைய சிறப்புப் பெயர்கள் என்பது சலிங்கத்துப்பரணியால் அறியப்படுஞ் செய்திபாகும்[2]. பிற மண்டலங்களும் இங்ஙனமே பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. தொண்டைமண்டலமாகிய சயங்கொண்ட சோழமண்டலம் மாத்திரம் முன்போலவே இருபத்துநான்கு கோட்டங்களாகப்பிரிக்கப்பட்டிருந்தது.


  1. 2. அரிசிலுக்கும் காவிரிக்கும் நடுவான உய்யக்கொண்டார் வள நாட்டுத் திரைமூர்நாட்டுப்பள்ளிச்சந்தம் இறக்கின நெற்குப்பை அளந்தபடி நிலம்'-5. I. I. Vol. I. Ins. No. 4 ; கொள்ளிடத்திற்கும் காவிரிக்கும் நடுவிலுள்ள நிலப்பரப்பு, விருதராசபயங்க ரவளநாடு என்று வழங்கிற்று என்பது மாயூரந்தாலூகா இலுப்பைப்பட்டிலுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது.
  2. 3. 4. பரணி - தா , 134, 243, 582.