உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல்

83


இனி, ஒவ்வொரு வளநாடும் பல நாடுகளாகப் பகுக்கப்பட்டிருந்தது. வளநாட்டின் உட்பகுதிகளாகிய நாடுகளுள் சில, கூற்றங்கள் எனவும் வழங்கிவந்தன. ஒவ் வொரு நாடும் சில தனியூர்களாகவும் பல சதுர்வேதி மங்கலங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சதுர்வேதி மங்கலமும் சில சிற்றூர்களைத் தன்னகத்துக் கொண்டு விளங்கிற்று.

2. அரசனும் இளவரசனும் :- இங்ஙனம் வகுக்கப்பட்டிருந்த சோழ இராச்சியத்திற்குச் சோழ அரசனே தலைவன் ஆவன். அரசியலில் தலைமை வகித்து எவற்றிற்கும் பொறுப்புடையவனாய் நீதி தவறாது ஆட்சிபுரியும் கடமை இவ்வேந்தனுக்கேயுரியதாகும். சோழமன்னர் கள் பட்டத்திற்குரிய தம் புதல்வர்க்கு இளவரசுப் பட்டம் கட்டி அவர்களை அரசியல் முறைகளில் நன்கு பழக்கிவருவது வழக்கம். இதற்கேற்ப, நம் குலோத்துங்கன் தனது மூத்தமகனாகிய விக்கிரம சோழனுக்குத் தன் ஆட்சிக்காலத்தில் இளவரசுப்பட்டம் கட்டி அரசியல் நுட்பங்களையுணர்ந்து வன்மையெய்துமாறு செய்தான். இவ்விக்கிரம சோழனே குலோத்துங்கனுக்குப் பின்னர் முடிசூடியவன் என்பது முன்னரேயுணர்த்தப்பட்டது.

3. உடன் கூட்டம் ;- அரசன், தான் விரும்பிய வாறு எதனையும் நடத்தற்குரிமையுடையவனெனினும் பல அதிகாரிகளுடனிருந்து ஆராய்ந்தே காரியங்களை நடத்துவது வழக்கம்.[1] இவ்வதிகாரிகளை 'உடன்-


  1. 4. சோழவ மிச சரித்திரச் சருக்கம். பக். 43, 44.