உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

முதற் குலோத்துங்க சோழன்

இதனைப் பண்டைக் காலமுதல் ஆட்சிபுரிந்துவந்தோர் தமிழ் வேந்தர்களுள் ஒருவராகிய சோழமன்னர் ஆவர். இவர்கள் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய தலைநகரங்கள் உறையூர், காவிரிப்பூம்பட்டினம் என்பன. பிற்காலத்துச் சோழமன்னர்களது ஆட்சிக் காலங்களில் தஞ்சாவூரும், கங்கைகொண்ட சோழபுரமும் தலைநகரங்களாகக் கொள்ளப்பட்டன. சோழர்களுக்குரிய அடையாள மாலை ஆத்தியாகும் ; கொடியும் இலச்சினையும் புலியாம்[1]. வடவேந்தரையொப்ப இன்னோர் சூரியகுலத்தினரென்றும் காசிபகோத்திரத்தினரென்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன[2].

பரசிராமர் அரசகுலத்தினரை அழித்தொழிப்பதையே தம் பெருநோன்பாகக் கொண்டு இப்பரத கண்டம் முழுவதும் சுற்றிவந்த நாட்களில், காவிரிப்பூம்பட்டினத்தில் காந்தமன் என்ற சோழமன்னன் ஒருவன் அரசாண்டுவந்தான். அவன் பரசிராமரது வருகையைக் கேட்டுப் பெரிதும் அஞ்சி, பூம்புகார்த் தெய்வமாகிய சம்பாபதிபாற் சென்று, தான் உய்யும்வழி யொன்றுணர்த்துமாறு பணிவுடன் வேண்டினன். அஃது அவனது காதற்கணிகையின் புதல்வனாகிய ககந்தனுக்கு


  1. 4. 'நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே, நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே'- புறநானூறு-45 'புலிபொறித்துப் புறம்போக்கி' - பட்டினப்பாலை-135
  2. 5. கலிங்கத்துப்பரணி - தாழிசைகள் 173, 174. விக்கிரமசோழனுலா - கண்ணிகள் 1, 2, 3. இராசராசசோழனுலா - ௸ 1, 2, 3.