பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

ஆராய்ச்சி மாணவனும் வெளியே எடுத்துச்செல்லாமல், உள்ளேயே வைத்துப் படிக்கவேண்டும். தனித்துறை ஆராய்ச்சி நன்கு வளர்ந்துள்ளது. பெரிய நகரங்களிலே சிறந்ததோர் வணிகத் தொழில் நுட்ப நூலகங்கள் கட்டாயம் இருத்தல் வேண்டும். இந்நூலகங்களைச் சுற்றியுள்ள பகுதிவாழ் மக்கள் செய்யும் செயல்களின் தரத்தையும், வளத்தையும் இந் நூலகங்கள் சரிப்படுத்துகின்றன.

இதுகாறும் கூறியவற்றிலிருந்து, சமுதாயம் கல்வி, வணிகம், பொருளியல் முதலிய பல துறைகளிலேயும். நூலகத்தின் செல்வாக்குப் படிந்துளது என்பதை நன்கு அறியலாம், சிறந்த நூலகங்கள் மக்களுக்கும் நூலகத்துக்கும் இடையே அரிய பிணைப்பை ஏற்படுத்த முயலுகின்றன. இதற்காகத் தனித்த விரிவுத்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக ஆசிரியர்கள், குழந்தைகளுக்காக நூலகங்களைப் பார்த்தலும், அவை பணியாற்றுவதைக் கவனித்தலும், நூலகத்தைப் பயன்படுத்தலை நோக்கலும் ஆகிய வேலைத் திட்டத்தைக் கூறலாம். இதற்காக ஆசிரியர்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்வர். இதற்கெனத் தனி வகுப்புக்களும் சொற்பொழிவுகளும் நடக்க ஏற்பாடு செய்தல் உண்டு.

பெரியோர்களுக்காக அடிக்கடி சொற்பொழிவுகளும், பொருட்காட்சிகளும், படம், நூல், அச்சு ஆகியன பற்றி மட்டுமன்றி படிக்கும் வழக்கத்தைப் பெருக்கத் தேவையானவை பற்றி நடத்தல் உண்டு. பல நூலகங்களிலே, வயது வந்தோர் சந்திக்க, பேச, அளவளாவ, வானொலி கேட்க, இசைத் தட்டுகளைச் சுவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட தனி அறைகள் பல உள்ளன.