பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ்க்காதலர் : 33 என்று தொடங்கி மாணவர்களின் சீட்டாட்டத்தைக் கடிந்து, ஒன்றெய்தி நூறு இழக்கும் சூதர் பெற்ற ஒன்று 'சூதர் என்ற பட்டமே என விரித்துரைத்து பரிமேலழகரின் உரை பொருத்தமின்மையைக் காட்டுந்திறன் அற்புதம். மாணவர்கட்கு துப்பாக்கிக் குறளையும், கிராப்புக் குறளையும் (பக். 58) திருடர் செய்தியைக் கூறும் பகுதியும் (பக். 60), போன்ற இடங்கள் கேட்போருக்கு நகைச்சுவை விருந்தாக அமைகின்றது. பேச்சு ஒலி நாடாவில் ஏறி, பின்னர் அச்சேறியதால் நூலைப் படிக்கும் போது அண்ணலின் பேச்சை நேரில் செவி மடுப்பதுபோல் உள்ளது. உயிரோட்டமுள்ள பேச்சு. (3) திருக்குறள் கட்டுரைகள்: இதில் பதினொரு கட்டுரைகள் அடக்கம். இதில் நாம் காண்பது, "திருக்குறளே அண்ணல் வலம் வரும் கோவில்; திருவள்ளுவரே அவர் வழிபடும் தெய்வம். வள்ளுவர் வகுத்த நெறியே அண்ணல் கடைப்பிடிக்கும் நெறி. திருக்குறள் கருத்துகளே அவர் 'உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை’’’ இவையே பதினொரு கட்டுரைகளாக ஒரு பதிகம் போல் (பலன் கூறும் பாடல் உட்பட) அமைந்து நூல் வடிவமாக இலங்குகின்றது. இஃது அண்ணலாரின் அறுபதாம் ஆண்டு விழா நினைவு வெளியீடு (1958). இக்கட்டுரைகளில் என்னை மிகக் கவர்ந்தது பீலி பெய் சாகாடு" (7வது கட்டுரை) என்பது. காரணம், வாழ்க்கையதுபவங்கள் பல செறிந்திருப்பதால். (4) திருக்குறளின் செயல்திறன்: இருப்பூர்தி கால அட்டவணை வழிப்பயணத்திற்கு துணை நிற்பதுபோல் திருக்குறள் வாழ்க்கைப் பயணத்திற்கு உதவும் முறையைக் காட்டுவது. திருக்குறளில் செயல்திறனுக்கு 12 தலைப்புகள் இருப்பனவாகக் காட்டுவார். கால்பகுதியில்: ஆள்வினையுடைமை, இடுக்கண் அழியாமை ஊக்கம் உடைமை என மூன்று. அரைப்பகுதியில்: தெரிந்து செயல் வகை, தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல் என மூன்று.