பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

61



‘உலகமும், உலகத்து வாழ்வும், அவ்வாழ்விலே அடையும் இன்பநலங்களுமாகிய எல்லாமே அழியக் கூடியவை; அதனால், உயிருடனுள்ளபோது நல்ல அறநெறிகளிலே உள்ளத்தைச் செலுத்தவேண்டும்; அதுவே வாழ்வினைச் சிப்புடையதாக ஆக்குவதாகும்’ என்ற உரைப்பது காஞ்சித் திணையாகும்.

இந் நூலாசிரியரான மாங்குடி மருதனார் ஒப்பற்ற தமிழ்ச் சான்றோருள் ஒருவராக அந்நாளிலே விளங்கியவர். மதுரைப் பாண்டியனான நெடுஞ்செழியன் என்னும் பேரரசனால், ‘மாங்குடி மருதன் தலைவனாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர்’ என்று, மனமுவந்து போற்றப்பெற்ற தனிச்சிறப்பினை உடையவரும் இவராவர்.

இப்பாட்டுடைத் தலைவனான நெடுஞ்செழியன் என்பவன், அக்காலத்தே வல்லமை உடையவனாகவும், புலவர் போற்றும் புகழினாலே சிறந்தவனாகவும், தானே தண்டமிழ்ப் புலவனாகவும் விளங்கியவன் ஆவான். சேர மன்னனுடன் தலையாலங்கானம் என்னும் இடத்திலே பெரும்போர் இயற்றி, அதன்கண் அடைந்த வெற்றியினாலே, "தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்” என்ற அடைமொழியினைப் பெற்று விளங்கியவன் இவன்.

இவன் காலத்திய மதுரைப்பேரூரின் செழுமையினையும், சிறப்பினையும், மாங்குடி மருதனார் இந்தப் பாட்டிலே அருமையான முறையிலே எடுத்துக் கூறியிருக்கின்றனர். அவற்றுள் சிலவற்றை மட்டும் நாம் இந்தப் பகுதியிலே காண்போம்.

நாட்டின் செழுமை

பாண்டியநாட்டில் அக்காலத்தில் மழை தவறாமற் பெய்தது. மக்களின் தொழில் முயற்சிகள் எல்லாம் குறைவின்றி நிகழ்ந்துவந்தன. அதனால், எத்திசையிலும் விளைபொருள்கள் பெருகின. ஒவ்வொரு வித்தும் ஒன்றுக்கு ஆயிரமாக விளைவு தந்தது. விளைநிலங்கள் எப்புறத்தும் வளமுடன் விளங்கின. மரங்கள் ஏராளமான பயனைத் தந்து கொண்டிருந்தன. மக்கள் நோயற்றவர்களாக இருந்தனர். அவர்களுடைய தோற்றத்தின் பொலிவினாலேயே, அந்நாட்டின் வளமையினை உணர்ந்து கொள்ளலாம்.

வாணிகச் சிறப்பு

பாண்டிய நாட்டு மக்கள் வளமுடன் வாழ்ந்தனர் என்பதுடன், அவர்கள் வாணிகத்துறையிலும் சிறப்புடன்