பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

முத்தமிழ் மதுரை


திகழ்ந்தனர். கடலினின்றும் கிடைத்த ஒளியுடைய முத்துக்கள்; அரத்தினாலே பிளந்து அறுக்கப்பெற்ற கவர்ச்சியான வளையல்கள்; பரதவர்கள் கடலிற் சென்று கொணர்ந்து தருகின்ற பலவகையான கடல்படு பொருள்கள்; வெண்மையான உப்பு; இனிய புளி; மீன் வற்றல் ஆகிய பலபொருள்கள் பாண்டி நாட்டினின்றும் வெளிநாடுகட்குப் போயின. வெளிநாடுகளிலிருந்து கப்பல்களில் குதிரைகள் வந்து இறங்கின. இவ்வாறு, வெளிநாட்டவரோடு கடல் வாணிகம் செய்தும் அந்நாளைய மக்கள் சிறப்புற வாழ்ந்தனர்.

மதுரைமா நகரம்

மதுரைமா நகரத்தைச் சுற்றிலும் ஆழமாக அகழப் பெற்ற அகழியொன்றும் விளங்கியது. நீர் அதன்கண் நிரம்பியிருந்தது. அகழியின் உட்புறமாக, வானளாவ உயர்ந்த பலவடுக்குகளான கோட்டைச் சுவர்கள் விளங்கின. கோட்டை வாயில்கள் நாற்றிசையினும் அமைந்திருந்தன. எவராலும் எளிதில் வெற்றிகொண்டு உட்புகவியலாத வலிமையுடையவை அவை. பகைவர்க்குக் காணுதற்கும் அச்சத்தை விளைவிக்கும் அத்துணைப் புகழுடையவும் அவையாகும். திண்மையாக விளங்கிய கோட்டைவாயிற் கதவுகள், நெய் பூசப்பெற்றதனால் கருநிறம் பெற்றுப் பளபளவென ஒளிவீசிக் கொண்டிருக்கும் தன்மையவா யிருந்தன. கோட்டை வாயிலின் மேற்புறத்தே, மலைபோன்று விளங்கிய உயர்ந்த மாடங்களிலே மேகங்கள் தவழ்ந்து கொண்டிருந்தன. வெள்ளம் வற்றாது சென்று கொண்டிருக்கின்ற வையைப் பேரியாற்றினைப் போல, அவ்வாயில்களினும், மக்கள் வெள்ளம்போலத் திரள்திரளாக எப்போதும் சென்று கொண்டிருப்பார்கள்.

நகரினுள்ளே ஏராளமான பெரிய பெரிய வீடுகள் இருந்தன. அகற்சி உடையனவாயும், ஆகாயத்தை அளாவும் உயரமுடையவாயும் அவை விளங்கின. நல்ல காற்றோட்டம் வீட்டினுள்ளே எப்போதும் இருப்பதற்கு வசதியான வகையிலே சாளரங்கள் பலவற்றைக் கொண்டனவாகவும் அவை இருந்தன. இருபுற வீடுகட்கும் இடையே விளங்கிய தெருக்கள், கரைகளை இருபாலும் கொண்ட பேராறுகள் போலக் காணப்பட்டன.

கொடிகள்

இந்நாளிலே, ஒவ்வொரு நாட்டினும் அவ்வந் நாட்டின் தேசியக் கொடிக்கு இருக்கின்ற சிறப்பினைப் பற்றி நாம் நன்கு