பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

67



கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி

இவன் கடலுள் சென்ற காலையில் உயிர் துறக்க நேர்ந்த காரணத்தினாலே இப் பெயர் பெற்றவன். ‘கடலிற் கலஞ் செலுத்துவதினும், கடற்போர் இயற்றிப் பகைவரைப் புறங்காண்பதினும் ஆற்றலுடையவன்’ என இவனைப்பற்றிக் கூறுவர். பரிபாடல், புறநானூறு ஆகியவற்றுள் இவன் பாடிய பாடல்கள் உள்ளன. இவனுடைய ‘உண்டால் அம்ம’ எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் மிகச்சிறந்த சுவையுடையதாகும்.

பொற்கைப் பாண்டியன்

நீதியின் செம்மைக்காகத் தன் கையைத் தானே குறைத்துக்கொண்டவன் இவன். இந்தச் செய்தியினை, ‘நீதி சிறந்த மதுரை’ என்ற பகுதியிற் கண்டோம்.

கீரஞ்சாத்தன்

இவனைப் பாடியவர் ஆவூர் மூலங்கிழார் என்னும் அருந்தமிழ்ச் சான்றோர் ஆவர். போரிற் புறமுதுகு காட்டி ஓடுகின்ற வீரருக்கு முன்னே சென்று ஊக்க மூட்டித் துணை நிற்கும் சிறந்த வல்லமையுடையவன் இவன் ஆவான்.

கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி

இவனது ஆண்மையை வியந்து ஐயூர் முடவனார், மருதனிள நாகனார் என்போர் பாடிப் போற்றியுள்ளனர்.

சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்

இவன், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்னும் சான்றோராற் பாடப்பெற்ற பெருமையினை உடையவன். பகைவரிடத்தே பெரிதான சினமும், அன்பரிடத்தே மிகுதியான அருளும் கொண்டிருந்தவன்.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

பாண்டியர்களுள் மிகவும் புகழுடன் வாழ்ந்த பேரரசன் இவன் ஆவான். இடைக்குன்றூர் கிழார், கல்லாடனார், குறுங்கோழியூர் கிழார், நக்கீரர், பரணர், பொதும்பில்கிழார் மகனார், மதுரைக் கணக்காயனார், மாங்குடி மருதனார் ஆகிய சான்றோர்கள் பாடிப்போற்ற வாழ்ந்தவனும் இவன். சேரமான்