பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

முத்தமிழ் மதுரை


தீந்தமிழ் மதுரைக்கும் நெருங்கிய தொடர்பு அன்றும் இருந்தது என்பதற்குப் பல சான்றுகளை நாம் காட்டலாம்.

புலமை வெள்ளம்

அந்தணார் கபிலரும், நக்கீர தேவரும், பரணரும், மதுரைக் காஞ்சி பாடிய மாங்குடி மருதனாரும் மற்றும் மதுரைக் கணக்காயர் போன்ற எண்ணற்ற பெரும்புலவர்களும் இருந்து தமிழ்வளம் பெருக்கிய பொற்காலமும் கடைச்சங்க காலமே ஆகும். இவர்களாலும், மதுரை பெரும் புகழ்பெற்றுத் ‘தமிழ் மதுரை’ யாகவே விளங்கியது.

மதுரை நகரப் பெரும்புலவர்களாகச் சங்கத்தொகை நூற்களுள் காணப்படுவோர் பெயர்களை எண்ணினால், அவர்களுட் பலர் பற்பல தொழில்களையும் செய்துகொண்டு வாழ்ந்தவர்கள் என்பதையும், தமிழ்ப் பற்றிலும் அவர்கள் சிறந்து விளங்கியவர்கள் என்பதையும் காண்கின்றோம்.

ஆசிரியர்களான கணக்காயனார், இளம்பாலாசிரியர், பாலாசிரியர் போன்றாரும், அறுவை வாணிகர், ஓலைக்கடையார், காமக் கணியர், கூத்தர், கொல்லர் போன்ற பலப்பல தொழிலோரும் தமிழ்ப்புலமைப் பெற்று விளங்கிய சிறப்பினாலே, பொதுமைநிலை பெற்றுத் தமிழ் அந்நாளிலே உயர்ந்து நின்றது. ‘தமிழ் கற்பிப்பதும் எழுதுவதும் பேசுவதும் பாடுவதும் தம் தொழிலாகக் கொண்டவர் மட்டுமே தமிழைக் காக்கும் உரிமையாளர்கள்’ என்று, மக்கள் பொறுப்பில்லாமல் விட்டுவிடவில்லை. அனைவரிடமும் தமிழார்வம் பரவியிருந்தது. அந்தத் தமிழார்வமே தமிழின் ஈடற்ற செவ்விக்கும் காரணம் எனலாம்.

இசையும் கூத்தும்

முத்தமிழ் நித்தமும் முழங்கிய மதுரையிலே, பாணர் குடியினரும் மற்றும் பலரும் இசைத் தமிழைப் பரப்பியும், வளப்படுத்தியும் வாழ்ந்து வந்தனர். பண் அமைந்துள்ள பரிபாடல் செய்யுட்கள் பழந்தமிழ் இசைப்பாக்களாகவே உலவுகின்றன.

இவ்வாறே, கூத்திலும் மதுரை புகழ் பெற்றிருந்த தென்பதனை, மதுரைக் காருலாவியங் கூத்தனார், மதுரைத் தமிழக் கூத்தனார், சேந்தன் கூத்தனார் போன்ற புலவர்களின் பெயர்களே நமக்கு உணர்த்துவனவாகும். கூத்து