பக்கம்:முத்தம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

என்ற நம்பிக்கை அவருக்கு உண்டுமாம். அவளும் அவர் நம்பிக்கை குலையும் படி எதுவும் செய்ததில்லை. வாழ்க்கை அமைப்பிலே அவள் கொண்டுள்ள கருத்துக்கள் அவருக்கு சிரிப்பையே கொடுத்து வந்தனவாம்." உனக்கு என்ன வயசு ஆகிவிட்டது. பத்மா! அனைத்தையும் கரைகண்டவள் மாதிரிப் பேசுகிறாய். அனுபவம் மிகுந்த கிழவி போலப் பேசுதியே. அதனாலென்ன. போகப்போக எல்லாம். சரியாயிடும். நீயும் எல்லாரையும் போல மாறிப்போவாய்" என்று சொல்லிச்சிரிப்பாராம். நானும் சிரித்துக்கொண்டே "அதைத் தான் பார்க்கலாமே" என்று சொல்வது வழக்கம் என்றாள்.

"நான் ஒரு மாதிரியான ஆசாமி. எனக்கு யாரையும், எதையுமே பிடிக்கவில்லை. இந்த உலகம், மனிதவர்க்கம் இதில் உள்ள சீரழிவுகள் சிதைவுகள் எல்லாவற்றையும் காணக்காண வெறுப்பும் வேதனையும் தான் வளர்கின்றன. என் உள்ளம் லட்சிய நினைவுகளிலும் ஆசைகளிலும் கனவுகளிலும் தான் வட்டமிட்டுச் சுழல்கின்றன. அதனாலே என்ன ஆச்சு? நானும் எனது போக்கும் விசித்திரமானதாக, வாழத் தெரியாத பண்பாக மற்றவர்களுக்குத் தோன்றுவதில் வியப்பே கிடையாது. இதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்? ஆதிமுதலே என்னை நானே தனியனாக்கி, தனிமை விரும்பி, தனிமையிலேயே என்னை உருவாக்கிக் கொண்டு வந்திருப்பதுதான்......."

அவன் தன்னையே விமர்சித்து விளக்கியது அவளுக்கு அவனிடம் அதிகமான பிரியத்தையே விளைவித்தது,

"மற்றவர்களைப் போல உங்களைப் பற்றி நான் நினைக்க வில்லை" என்றாள் பத்மா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/33&oldid=1496640" இலிருந்து மீள்விக்கப்பட்டது