பக்கம்:முந்நீர் விழா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

முந்நீர் விழா


"நீங்கள் சுற்றிச் சுற்றிப் பேசாமல் தெளிவாக என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள். அப்படியே செய்யலாம்.”

"அந்த விரதம் ஏதோ ஒரு விசித்திரமான சந்தர்ப்பத்தில் தொடங்கியது. கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணின் முதுகில் சோறு இட்டு, அதைச் சாப்பிடவேண்டும் என்பதே அந்த விரதம். இப்படிச் செய்வதாக வேண்டிக் கொண்டால் உன் நோய் தீரும் என்று ஒரு பெரியவர் சொன்னர். நான் வேண்டிக் கொண்டேன்; நோய் தீர்ந்தது. ஆனால், நான் வேண்டிக்கொண்டதை நிறைவேற்ற முடியாமல் திண்டாடுகிறேன்" என்றார்,

சடையனார் மனைவி கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தியைப் புலவர் தெரிந்து கொண்டிருந்தார். அவ்விருவரும் வீட்டுக்குள் நுழையும்போதே அந்த அம்மாளைக் கண்டார்கள். அப்போதே இந்தப் புலவருக்கு, 'இவ்வாறு இவரைச் சோதனை செய்ய வேண்டும்' என்ற கருத்து உருவாகிவிட்டது.

சடையனார் சற்றே யோசித்தார். "இது தானா? நல்ல வேளை! உங்கள் விரதத்தை நிறைவேற்ற வேறு இடங்களுக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை. என் மனைவி இப்போது கர்ப்பவதி. அவள் முதுகிலே நான் சோறிடுகிறேன்" என்று அவர் சொன்னபோது அவருக்கு நடுக்கம் ஏற்படவில்லை; கேட்ட புலவர் தாம் துணுக்குற்றார், "உண்மையிலேயே சடையனார் ஒப்புக் கொள்கிறாரா?' என்ற ஐயம் அவருக்கு எழுந்தது.

"உங்கள் மனைவி எதற்கு? வேறு யாரேனும் இருந்தால் போதும்" என்றார் புலவர்.

"வேறு ஒருத்தியைத் தேடுவானேன்? வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அழலாமா? எப்போது உங்கள் விரதம் நிறைவேற வேண்டும்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/63&oldid=1207546" இலிருந்து மீள்விக்கப்பட்டது