பக்கம்:முந்நீர் விழா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விச்சுளிப் பாய்ச்சல்

55

 புலவர் சற்றே தயங்கினார்.

"நீங்கள் இதுபற்றிச் சிறிதும் கவலைப்பட வேண்டாம். உங்கள் விரதத்தை நிறைவேற்றத் துணை செய்யும் பேறு எங்களுக்குக் கிடைத்ததே என்று மகிழ்ச்சி அடைகிறேன். இப்போதே அதை நிறைவேற்றலாமே" என்று சடையனார் கூறினார்.

உடனே சூலி முதுகில் சோறிடுவதற்கு ஆவன செய்தார் சடையனார் வயிறு நிரம்பிய பிள்ளைத் தாய்ச்சியான அவர் மனைவி குனிந்துகொண்டு நிற்க, அவள் முதுகில் சோற்றைப் பிசைந்து போட்டார்கள். புலவர் நின்ற படியே அதை உண்டார். அப்போதெல்லாம் அவர் நெஞ்சு அவரைச் சுட்டது. அதே சமயத்தில் வியப்புணர்ச்சி அவரை ஆட்கொண்டது.

அன்று மாலையே பாண்டி நாட்டுப் புலவர்கள் அயன்றைச் சடையனாரிடம் விடைபெற்றுக் கொண்டார்கள். அவரைப் பலபடியாகப் பாராட்டிவிட்டுச் சென்றார்கள். அயன்றைச் சடையனார் புலவருடைய விரதத்தை நிறைவேற்ற வேண்டி, கருவுற்றிருந்த தம் மனைவியின் முதுகில் சோறு இட்டு உண்ணச் செய்தார் என்ற செய்தி எங்கும் பரந்தது.

சோதனை செய்ய வந்த புலவர்கள் தம் ஊர் சென்று பாண்டியனை அணுகினர். தாம் செய்த சோதனையையும் சடையனாருடைய பேரன்பையும் கூறித் தம் வியப்பையும் புலப்படுத்தினார்கள். "இவ்வளவு கடுஞ்சோதனையை நீங்கள் செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் சோதனையில் அவர் வென்றுவிட்டார். அவரை நான் பார்த்துப் பழகவேண்டும். இவ்வளவு உயர்ந்த குணம் இருப்பதனால் தான் கழைக்கூத்தி அப்படிப் பாடினாள்" என்று அரசன் சொன்னான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/64&oldid=1207548" இலிருந்து மீள்விக்கப்பட்டது