பக்கம்:முருகன் காட்சி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகும் உலகும் 17

விரலின் தெறலினிலும் இறைவனின் திருவோலக்கப் பொலிவையும் சிறப்பையுமே கண்டார் பாரதியார்.

இத்தகைய நெறியில்-இயற்கையில் இறைவனைக் கண்டு தலைப்படும் அருள்நெறியில் முதற்கண் பெரிதும் ஈடுபட்டவர் நக்கீரர். எனவே குறிஞ்சிநிலத் தெய்வமாகிய குமரனை-முருகனை-அழகின் வடிவமாக-முருகியலின் முழுப் பிழம்பாகக் கண்டார். மலையும் மலையைச் சார்ந்த நிலமாகிய குறிஞ்சியிலேதான் உலகில் மக்கள் முதன் முத லாகத் தோன்றி வாழத் தொடங்கியது என்பர் உயிர் நூல் ஆராய்ச்சி அறிஞர். இவ்வுலகின் தோற்றத்தையும் இயக்கத்தையும் கூர்ந்து நோக்கிய நம் முன்னோர்கள் இவ்வாறு இந்த உலகம் இடையறாது நடப்பதற்கு ஏதோ ஒரு பரம்பொருள்-ஒரு முழுமுதற்பொருள் இருத்தல் வேண்டும் என்று துணிந்தனர். ஒரு முழுமுதற் பொருளை இவ்வுலகின்கண் காணப்படும் ஒவ்வோர் அணுவிலும் உள்ளிடாய் நீக்கமற நிறைந்திலங்கி மன்பதைக்குத் தானே பற்றுக்கோடாய், தனக்கொரு பற்றுக்கோடுமின்றி, *ஆதியுமந்தமு மில்லாத அருட்பெருஞ் சோதியாய் சொரூப ஞானச்சுடரொளித் தீபமாய் எப்பொருளையும் தன்னுட்டோற்றி யழிப்பதுமாகிய ஒர் ஒப்பற்ற ஆற்றல் சான்ற பொருளைக் கந்தழி என்ற பெயரானே வழங்கி மனத்தால் நினைந்து வணங்கி வருவாராயினர். அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் அக் கந்தழியை யாண்டும் எத்திசையினும் கட்புலனுக்குத் தோன்றும் கவினார் அழகே என்று துணிந்தனர். அழகின் தோற்றமேமுருகியல் பின் வெளிப்பாடே மனமொழி மெய்களைக் கடந்த கந்தழியின்-கடவுளின் - தெய்வத்தின் தோற்றம் ஆதல் வேண்டும் என்று கருதினர்.

முருகு என்னுஞ் செஞ்சொல் அழகு, இளமை, மணம், கடவுட்டன்மை ஆகிய பொருட்களிற் பொதுளும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/19&oldid=585898" இலிருந்து மீள்விக்கப்பட்டது