பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/666

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமயிலை திருப்புகழ் உரை 107 (கனி) இனிமைகொண்ட மொழிகளை உடைய மின் அனைய ஒளிகொண்ட மாதர்கள் எல்லாரும் (இசை) பொருந்தும் பழிச்சொற்களைப் பேசுவதாலும், சேர்ந்துள்ள நெருப்புப்போல உலவிவரும் வட்டமான (பூரண) நிலவாலும். செழுமைகொண்ட விரிந்த பூவால் அமைந்த படுக்கை மெத்தைமீது உருகும் (இப்) பெண் மடலேற விரும்பி நாள்தோறும் துன்பம் உறாமல். ரேகைகள் கொண்ட வண்டுகள் உலவி நெருங்கியுள்ள இரண்டு புயங்களாலும் கலந்துகூடி, என் எண்ணம் கைகூடி வெற்றிதர (இந்த) மலர்ப்படுக்கையில் நீ (என்னை) அணைக்க வரவேண்டுகின்றேன். துளசிமாலை அணிகின்ற மார்பன், சக்கரம் தரித்தவன், அரி, (முராரி) முராசுரன் பகைவன், (சர்ப்பம்) ஆதிசேடன் என்னும் பாம்பில் (துயிலதரன்) துரக்கம் கொள்பவன். ஆன திருமால் - (ஆதரித்த) ஆசைகொண்ட மருகனே! வேதம், மறை (உபநிஷதம் - அல்லது தமிழ்மறை) வேள்வி இவை நிரம்பிய மயிலைப்பதியில் வீற்றிருக்கும் உக்ரமான குதிரையாகிய தோகையுடைய பச்சை மயில் வீரனே!