பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளை யானை ஆய்வுரை டாக்டர் பாலா எம்.ஏ., பிஎச்.டி I தமிழ்க் கவிதா தேவி இன்று மேன்மையான படைப்புச் சக்திகளின் தய விற்குக் காத்துக் கிடக்கிறார். முப்பதுகளில் புதுக்குரல்கள் எனத் தொடங்கிய புதுக்கவிதை இன்று காத்திரம் கெட்டு முணுமுணுப்புக்களின் குரலாக மெலிந்து கிடக்கிறது. எழுத்து, கசடதபற, வானம்பாடி ஆகிய கவிதைக் குழுவினரின் சாதனைகளுக்குப் பின் தமிழ்க் கவிதை உலகில் சிறப்பாக எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. திறமான தமிழ்க் கவிதைகள் என்றால் இன்று அப்துல் ரகுமான், சிற்பி, மீரா, மேத்தா, தமிழன்பன், ஞானக் கூத்தன், தருமு.சிவராமு, வைத்தீஸ்வரன் என்ற பட்டியலைத்தான் திருப்பிச் சொல்ல நேர்கிறது. குமுதம், சுபமங்களா, கணையாழி போன்ற பல இதழ்களில் வெளிவரும் நிகழ்காலக் கவிதைக் குரல்களில் தமிழுக்கான தனித்தன்மைகளோ, புதுமைக்கான கருத்துக் கவர்ச்சியோ இல்லை. ஒரே குரலில், ஒரே ராகத்தில் தமிழ்க் கவிதை 'சதுரப்படுத்தப்படுவதை' உற்சாகமாக ஆதரிக்கிறவர்களின் உள்நோக்கங்களை நாம் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. மனுஷ்ய புத்திரன், இலக்குமி குமாரன், ஞான திரவியம், இரவி சுப்பிரமணியன் போன்ற இளங்கவிஞர்கள் தங்களுக்குக் கிடைத்திருக்கிற கவனிப்பிற்கு நியாயம் செய்யும் கவிதைகளை இனிமேல் தான் எழுத வேண்டும். தனிமை உலகின் மெளனச் சித்திரங்களாகவும், ஹைகூ என்னும் குறும்பாட்டுக் குறும்புகளாகவும் தமிழ்க் கவிதை தேங்கிக் கிடக்கிறது. மரபின் பெருமை, புதுமையின் வளம், அறிவுத்தினவு எல்லாவற்றையும் தொலைத்து விட்ட ஒரு வறட்சிக்களமாக இருக்கும் நிலையில், தமிழ்க் கவிதை புதிய படைப்பு ஊற்றுக்களுக்காகத் தவம் கிடக்கிறது. தமிழ்க் கவிதையைத் தலைநிமிர்த்திப் புதுத்தடத்தில் செலுத்த, புதிய இயக்கம் - புதிய கொள்கைகள் - புதிய எழுத்துக்கள் தேவை. அதன் தடங்கள் இப்படி அமையலாம்: முருகுசுந்தரம் கவிதைகள் 9