பக்கம்:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தமிழகப் பகுதி

தமிழ்த் தொண்டு

இயற்கை அன்னை அருளிய இன் தமிழ்!
அயல்மொழி வேண்டாஆர் எழில் சேர் தமிழ்!
நிறைதமிழ்! இந்நாள் நெடுநிலம் முழுதும்
குறைவில தென்று குறிக்கும் தனித்தமிழ்!
தமிழர் வாழ்வின் தனிப் பெருமைக்கும்
அமைந்த சான்றாம் அமுதுநேர் செந்தமிழ்
அந்த நாளில் அறிவுசால் புலவர்
எந்தநாள் தோன்றிய தோஎனும் பழந்தமிழ்!
தமிழ்நாடு பலப்பல தடுப்பரும் இன்னலில்
அமைந்தும், அணுவும் அசையாப் பெருந்தமிழ்!
தமிழை அழித்தல் தமிழரை அழிப்பதென்று—
இமையாது முயன்ற அயலவர் எதிரில்,
இறவாது நிற்கும் ஏற்றத் தமிழன்
பெருநிலை எண்ணுக தமிழ்ப்பெரு மக்களே!
அருஞ் செல்வர்கள் அன்று தொடங்கி
இன்று வரைக்கும் ஈந்து வந்துள்ள
பொன்றா ஆதரவு—அன்றோ காரணம்?
அயல்மொழி எல்லாம் அண்டையில், கண்ணெதிர்
வியக்கு முறையில் மேன்மை பெற்றன;
என்ன முயற்சி! எத்தனை ஆர்வம்!
இன்ன வண்ணம் இருக்கையில், நம்மவர்
தமிழிடம் காட்டும் தயவு போதுமா?

 

(2)

17