பக்கம்:முல்லைக்கொடி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

கை பிணைந்து அயர்வர்

ஆயர்கள் அலைந்து திரியும் வாழ்வினராவர். மக்கள் வாழ்வு முறை, அம்மக்கள் மேற்கொள்ளும் தொழில் முறைக்கு ஏற்பவே அமையும். ஆயர்கள் ஆனிரை ஓம்பி வாழும் வாழ்வுடையவர். அதனால், அவர்கள் அவ்வானிரைக்கு வேண்டிய புல்லும் புனலும் குறையாது கிடைக்கும் இடங்களைத் தேடிச் சென்று வாழவேண்டிய இன்றியமையாமைக்கு உள்ளாயினர். ஓர் இடம் எவ்வளவு நிறைந்த வளமுடையதாயினும், அது, அவர் ஆனிரைக்குத் தேவையான புல்லை, ஆண்டு முழுவதும் அளித்தல் இயலாது. அதனால், ஆயர், அவை கிடக்கும் இடங்கள் தோறும், தம் ஆனிரைகளோடு அலைந்து திரிவர். ஆனிரை களோடு திறந்த வெளிகளில் தங்க வேண்டியதனால், ஆங்குத் தமக்கும், தம் ஆனிரைக்கும், கள்வர்களாலும், காட்டுக் கொடு விலங்குகளாலும் கேடு நிகழாவண்ணம் ஒன்று கூடி, ஒருவர்க்கு ஒருவர் துணையாய் வாழ்வர்; அவர்கள் ஆனிரைகளும் ஒன்று கலந்தே செல்லும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/106&oldid=707950" இலிருந்து மீள்விக்கப்பட்டது